மதுரையில் நள்ளிரவில் விசிக கொடி கம்பம் அனுமதியின்றி நடுவதாக கூறி காவல்துறையினர் கொடியை அகற்றியதால் விசிகவினர் வாக்குவாதம் செய்தனர்.
மதுரை மாநகர் புதூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் திருமாவளவன் கட்சி கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதற்காக நேற்று இரவு திடீரென 62 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டது.
அப்போது புதிதாக ஒரு கொடி கம்பத்தை எந்த முன்னறிவிப்பு இன்றி நடுவதாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் கீழ் மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் நேற்று இரவு காவல்துறையினர் கொடி கம்பத்தை அகற்றியுள்ளனர். அப்போது கொடி கம்பத்தை அகற்றுகையில் காவல்துறையினருக்கும் விசிகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கொடி கம்பத்தை காவல்துறையினர் அகற்றிசென்றனர்.
இன்றைய தினம் மதுரை வரும் திருமாவளவனை வைத்து இந்த கம்பத்தில் கொடியேற்ற திட்டமிட்ட நிலையில் கொடி அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கட்சி தொடங்கியபோது முதன்முதலில் ஏற்றப்பட்ட விசிக கொடி கம்பம் உள்ள நிலையில், புதிதாக அனுமதியின்றி வைக்கப்பட்டதால் இந்த கொடி கம்பம் வைக்கப்பட்டதால் அகற்றப்பட்டதாக வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசிகவினர் தெரிவித்தபோது, ஏற்கனவே நடப்பட்டுள்ள கொடியை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பணிகளுக்காக அகற்றுவதற்கான பணி நடைபெறுவதால் அருகில் விசிக தலைவரை வைத்து கொடி ஏற்றுவதற்கு திட்டமிட்டதாகவும் அதனை காவல்துறையினர் தடுத்து கொடி கம்பத்தை எடுத்துசென்றதாகவும் கூறப்படுகிறது.