குழந்தைகளுக்கு நுங்குவண்டி தயாரித்து வழங்கி பனை மரம் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் - ஆர்வமுடன் கற்றுக்கொண்ட சிறுவர்கள்.
பூலோகத்தின் கற்பகதரு
உலகிலேயே முதல்முறையாக தோன்றியத் தாவரம் பனை தான் என்கிறது வரலாறு. கடுமையான வறட்சியிலும் பனை தளராது வளரும் திறன் கொண்டது. கற்பக விருட்சகம் என்பதாலும் நமது முன்னோர்கள் பனையை வளர்த்துள்ளனர். பனை மரம் தமிழகத்தின் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றுப்பட்டது என்பதற்கும் சான்றாக சங்க கால நூல்களான தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பூமியின் கற்பக விருட்சமாக கருதப்படும் பனை மரத்திலிருந்து பயனுள்ள பொருட்களும், உணவுகளும் கிடைக்கின்றன. பனையிலிருந்து கிடைக்கும் பொருட்கள் கூடை, பெட்டி, பாய், ஓலை, விசிறி முதலியவையும் கிடைக்கின்றன. மேலும் பனங் கருக்கு, பாளை, பனங்கிழங்கு, பனை மட்டை, பனை ஓலை முதலியவையும் பனை மரத்தின் உறுப்புகளிலிருந்து கிடைக்கின்றன. இந்நிலையில் குழந்தைகளுக்கு நுங்குவண்டி தயாரித்து வழங்கி பனை மரம் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்தி பாரட்டை பெற்றுள்ளார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர்.
பனை குறித்த விழிப்புணர்வு
மதுரை மாநகர் செனாய் நகர் பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் அசோக்குமார். இவர் விதைப்பந்துகள் தயாரிப்பது, மரக்கன்றுகளை நடுதல், பனை விதையை பயன்படுத்தி பொம்மைகள் உருவாக்குவது உள்ளிட்ட இயற்கை சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்துவருகிறார். வருங்கால சந்ததியினருக்கு பனைமரத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 90-ஸ் கிட்ஸ் குழந்தைகளின் பிரபல விளையாட்டான நுங்கு வண்டிகளை உருவாக்கவைத்து அந்த விளையாட்டு மூலம் பனை மரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கோடை விடுமுறையில் நுங்குவண்டி
பனைமரத்தில் இருந்து வரும் பனை நுங்கு ஓடுகளை கொண்டு குழந்தைகள் விளையாடும் வகையில் நுங்குவண்டி செய்ய பயிற்சி அளித்தார். இதனை ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட குழந்தைகள் தாங்களே உருவாக்கிய நுங்கு வண்டிகளை ஓட்டி மகிழ்ச்சியடைந்தனர். குழந்தைகளிடம் பனைவிதை எவ்வாறு கிடைக்கிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, தவுன், பனை வெள்ளம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம் என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை என்பது குறித்தும், இயற்கை பேரழிவுளின் போது பாதுகாப்பானது என்பது குறித்தான விழிப்புணர்வுகள் குறித்து சுற்றுசூழல் ஆர்வலர் அசோக்குமார் குழந்தைகளிடம் எடுத்துரைத்தார்.
இயற்கை ஆர்வலருக்கு பாராட்டு
கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு உபயோகமான வகையில் இயற்கை சார்ந்த விழிப்புணர்வை விளையாட்டின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். கிடைக்கும் நேரத்தை செல்போன்களில் மூழ்கி நேரத்தை வீணாக்கும் குழந்தைகளுக்கு இயற்கை சார்ந்து நுங்கு வண்டி செய்ய கற்றுக்கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Silambarasan TR: கமலுடன் களமிங்கிய சிலம்பரசன்.. தெறிக்க விடும் “தக் லைஃப்” படத்தின் புது போஸ்டர்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Google Pixel 8a: பிரீமியம் AI தொழில்நுட்பத்துடன் கூகுள் பிக்சல் 8a செல்போன் இந்தியாவில் அறிமுகம் - அதுவும் இந்த விலைக்கா?