நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடிகர் சிலம்பரசன் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக படக்குழு வெளியிட்டுள்ளது. 


நாயகன் படத்துக்கு பிறகு கிட்டதட்ட 37 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் இருவரும் “தக் லைஃப்” என்ற படம் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்தில் திரிஷா, அபிராமி, நாசர், பங்கஜ் திரிபாதி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், வையாபுரி என ஏகப்பட்ட பேர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். 


தக் லைஃப் படத்தை கமலிம் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. முன்னதாக இப்படத்தில் ஜெயம்  ரவி, துல்கர் சல்மான் இருவரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்களவை தேர்தல் பரப்புரை,இந்தியன் 2 மற்றும் கல்கி ஏடி 2898 ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஆகியவை காரணமாக தக் லைஃப் ஷூட்டிங் தாமதமானது. இதன் காரணமாக இப்படத்தில் இருந்து துல்கர் சல்மான், ஜெயம் ரவி இருவரும் விலகினர். 


இதனிடையே துல்கர் சல்மானுக்கு பதிலாக சிலம்பரசனை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதேபோல் ஜெயம் ரவிக்கு பதிலாக அரவிந்த் சாமி நடிக்கப்போகிறார். தக் லைஃப் படத்தின் டைட்டில் வீடியோவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. 






தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் சென்னை, டெல்லி, உத்தரப்பிரதேசம் என இந்தியாவில் நடந்தது. தொடர்ந்து படக்குழு செர்பியா நாட்டில் படப்பிடிப்புக்காக சென்றுள்ளது. இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்பு கமல்,அபிராமி, நாசர், சிலம்பரசன் ஆகியோர் அடங்கிய தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் போட்டோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. இந்நிலையில் இன்று படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு சிலம்பரசன் தக் லைஃப் படத்தின் இணைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இப்படத்தில் சிலம்பரசன் போலீஸாக நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் வெளியிட்டு வீடியோ மூலம் தெரிய வருகிறது.