மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பச்சை நாச்சியம்மன் தெரு பகுதியில் வசித்து வருபவர் ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சீவ் குமார். இவர் மதுரை நேதாஜி ரோடு பகுதியில் ராஜஸ்தான் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரிடம் உறவினர் மூலமாக டெல்லியை சேர்ந்த ஜிதேந்தர் என்பவர் கடந்த 5 மாதங்களாக உதவியாளராகவும், ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.

 





இந்நிலையில் சஞ்சீவ்குமாருக்கு நெருக்கமான ஜிதேந்தர் அவரின் வங்கி பண பரிவர்த்தனை, தொழில் விவகாரங்களையும் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சஞ்சீவ்குமார் வங்கியில் இருந்து எடுத்து வந்த பணத்துடன் இருப்பதை பார்த்த ஜிதேந்தர் அதை எப்படியாவது திருடி சென்று விட தீர்மானித்துள்ளார். டிராவல்ஸ் உரிமையாளருக்கு மாலையில் டீ வாங்கி தருவது வழக்கம் என்பதால் சஞ்சீவ்குமார்க்கு டீ வாங்கிட்டு  வரவா என கேட்டுள்ளார். அதன்படி டீ வாங்கி அதில் மயக்க மருந்தை கலந்து கொடுத்த சிறிது நேரத்தில் சஞ்சீவ்குமார் மயங்கினார். உடனே  அவர் வங்கியில் எடுத்து வைத்திருந்த  5 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் கொண்டு பக்கத்து  கடையில் தனது ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு, தலைமறைவானார். 



 

சஞ்சீவ்குமார் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்து போது பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்து ஜிதேந்தரை தொடர்பு கொண்ட போது அவரின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சஞ்சீவ்குமார் திடீர்நகர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள ஜிதேந்தரை தேடி வருகின்றனர்.