மதுரை மாட்டுத்தாவணி பணிமனை சாலையில் தோண்டப்பட்ட குழிகளில் சிக்கும் அரசு பேருந்துகள் - தாமதமாகும் பயண நேரம் - கண்டுகொள்ளாத மாநகராட்சி - மன உளைச்சலுக்கு ஆளாகும் போக்குவரத்து பணியாளர்கள்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் பிரஸ்காலனி மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் குடியிருப்பு சாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளுக்காக சாலையோரங்களில் முழுவதுமாக குழிகள் தோண்டப்பட்டன. இதனை அப்படியே மண்ணை போட்டு மூடிவிட்டு சென்றதால் தொடர்ச்சியாக அந்த சாலையில் மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து பணிமனைக்கு சென்றுவரும் அரசு பேருந்துகள் சாலையில் உள்ள குழிகளில் சிக்கிக் கொள்ளும் நிலை நீடித்து விடுகிறது.
ஏற்கனவே அந்த சாலை மிகுந்த குறுகலான சாலை என்பதால் அரசு போக்குவரத்து பணிமனைக்கு அரசு பேருந்துகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதில் சாலைகளின் இரு ஓரங்களிலும் தோண்டப்பட்ட குழிகளில் அரசு பேருந்துகள் சிக்கி பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக கூடிய நிலை ஏற்பட்டுவருகிறது.
மேலும் இதுபோன்ற பள்ளங்களில் சிக்கக்கூடிய வாகனங்களை மீட்பதற்கான மீட்பு வாகனம் என்பது மதுரை மாநகரில் ஒரே ஒரு வாகனம் மட்டுமே இருப்பதன் காரணமாக இதுபோன்ற அவசர காலகட்டங்களில் அரசு பேருந்துகளை மீட்க முடியாத அளவிற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் அளவிற்கு தாமதமாக கூடிய நிலை உள்ளது. முக்கிய பேருந்து நிலையமான மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இது போன்ற மோசமான சாலை உள்ளதால் நாள்தோறும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவருகின்றனர். பணிமனையில் இருந்து பணிக்காக புறப்படும் போது இதே போன்று சாலைகளில் உள்ள பள்ளங்களில் பேருந்துகள் சிக்கிக் கொள்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அரசு போக்குவரத்து பணியாளர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர். மேலும் அந்த பகுதியல் ஆயிரணக்கான குடியிருப்புகள் உள்ள நிலையில் அந்த சாலை வழியாக செல்லக்கூடிய கார்கள் , இரு வாகனங்கள் கூட இதுபோன்ற பள்ளங்களில் மழைக் காலங்களில் சிக்கித் தவிக்கும் நிலை நீடித்து வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியர் , மாநகராட்சி மேயர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடர்ச்சியாக வாகனங்கள் பள்ளங்களில் சிக்கும் அவல நிலை நீடித்து வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.