தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும், கேரள மாநில மக்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். விடுமுறை காலங்களில் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்த அருவிக்கு நீர்வரத்து மேற்குத் தொடர்ச்சி மலை, வட்டக்கானல், வெள்ளக்கெவி ஆகிய பகுதிகளில் இருந்து கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 12-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதேபோல் தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. சுற்றுலா தளமாகவும், புனித தளமாகவும் விளங்கும் இந்த சுருளி அருவிக்கு ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்த அருவியில் குளிப்பதற்காக தினமும் தேனி மட்டுமின்றி, பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பக்தர்கள் புனித நீராடவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.