முன்னாள் விவசாய சங்க நிர்வாகியின் மறைவுக்கு குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, விக்கிரமங்கலம், கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கள்ளந்திரி, புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் மனுக்கள் மற்றும் கடிதங்களுக்கு வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு பதில் அளித்தனர். முன்னதாக கூட்டம் தொடங்கியவுடன் மதுரை மாவட்டம் வெள்ளரிபட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் பெரியார் பாசன விவசாய சங்கத்தின் நிர்வாகியும், முன்னாள் இந்திய கால்பந்தாட்ட அணியின் வீரருமான ராஜமாணிக்கம் என்பவரின் மறைவுக்கு மதுரை விவசாய குறைதீர் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில்  விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் மௌனஅஞ்சலி செலுத்தினர்.



 

 

இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கான கடன் அட்டை வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்த பொழுது தங்களுக்கு கடன் அட்டை கிடைப்பதில்லை எனவும் மதுரை மாவட்டத்தில் பாதி விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் கிடைப்பதில்லை எனவும், கடன் அட்டை முகாம்கள் குறித்து யாருக்கும் தெரியவில்லை என குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பெரியார் மற்றும் வைகை பாசன பகுதிகளுக்கு ஒருபோகம் மற்றும் இரு போகங்களுக்கான தண்ணீரை திறந்து விட வேண்டும் என இரு தரப்பு விவசாயிகள் கோரிக்கை எழுப்பினர். அப்போது இன்னும் ஒரு வாரத்திற்குள் மழை பெய்யுமா என பார்த்த பின்பு தண்ணீர் திறப்பது குறித்து உரிய வழிகாட்டுதல் படி தண்ணீர் திறக்கப்படும் எனவும், மேலும் தற்பொழுது தண்ணீர் திறக்கப்பட்டால் 20 நாட்களுக்கு தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனிடையே பேசிய விவசாயிகள் தங்கள் பகுதிகளுக்கு மானாவாரி பயிர்களை தேக்கிவைக்க அரசு குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டி அரசுக்கு ஆட்சித்தலைவர் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் தனியார் மூலமாக குளிர்பதனை கிடங்க அமைப்பது என்பது சிரமம் உள்ளதாக தெரிவித்தனர்.



 

இக்கூட்டத்தில் மதுரை மாங்குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்திற்கான நெற்பயிர் பயிர்வித்தும் மழை இல்லாததால் விளைச்சல் இல்லாமல் போனதால் நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டபோது, வரைமுறைக்கு உட்பட்டு உங்களது விவசாய நிலம் இல்லை என விளக்கமளித்தார். இதனால், ஆத்திரமடைந்த விவசாயி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து மாவட்ட ஆட்சியர் முன்பாக அரசுக்கு எதிராக முக்காடு போட்டபடி முழக்கம் எழுப்பினார். பின்னர் அரசை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடமும். வேளாண்துறை அதிகாரிகளுடமும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.