மதுரை மாவட்டம் பரவை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். அவருடைய மகன் கெளதம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், திண்டுக்கல்லுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். திண்டுக்கல் என்.எஸ்.நகரில் வசித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒய்.எம்.ஆர்.பட்டிக்கு குடிபெயர்ந்தார். பெயிண்டரான இவர், நண்பர்களுடன் சேர்ந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இவர், நண்பர்களுடன் சேர்ந்து பாரதிபுரத்துக்கு சென்றார். அங்கு பழைய தபால் அலுவலகம் அருகே நள்ளிரவு ஒரு மணி அளவில் நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மற்றொரு தரப்பினர் அங்கு மது போதையில் வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், கெளதமை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிஓடிவிட்டனர்.
அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த கெளதம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கெளதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை தீவிரப்படுத்தினார். கொலையாளிகளை பிடிக்க துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாரதிபுரத்தை சேர்ந்த 4 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கவுதம் மீது மதுரையில் ஒரு கொலை வழக்கும், திண்டுக்கல்லில் 2 கொலை முயற்சி வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.