உசிலம்பட்டி அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திமுகவினர் தத்தெடுத்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


தி.மு.க., தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பற்றி முந்தைய தலைமுறையினர் முதல் இன்றைய தலைமுறையினர் வரை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்தில் பிறந்த அவர் இளமை காலம் தொட்டே அரசியலிலும், மக்களுக்கான போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரது அப்பாவும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பேர் சொல்லும் பிள்ளையாக தனது செயல்பாடுகளில் திகழும் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளர், சென்னை மேயர், துணை முதலமைச்சர் படிப்படியாக தனது உழைப்பால் உயர்ந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று மக்களின் ஆதரவை பெற்றுள்ளார். கடந்த மார்ச் 1-ம் தேதி தனது 71வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை சிறப்பாக கொண்டாட திமுக தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தனது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாட வேண்டாம் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால் தி.மு.க., தொண்டர்கள் சமூக பணியோடு இணைத்து பிறந்தாள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டி அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு - அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திமுகவினர் தத்தெடுத்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.


தத்தெடுத்த ஆரம்ப சுகாதார நிலையம்


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிக்குண்டம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையிலான திமுகவினர் தாமாக முன்வந்து இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தத்தெடுத்து சொந்த செலவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய சுவர்களில் உள்ள விரிசல்களை சரிசெய்து வர்ணம் பூசுதல் மற்றும் சுகாதார வளாகத்தில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளின் போது சேடபட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜெயச்சந்திரன், உசிலம்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் இணைந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - MODI TN Visit: ”நோ” சொன்ன காவல்துறை - பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்றம்


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Lok Sabha Election 2024: சிதம்பரம், விழுப்புரத்தில் மீண்டும் வி.சி.க. போட்டி - வெளியானது வேட்பாளர் பட்டியல்?