MODI TN Visit: கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணி செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


பிரதமரின் கோவை பேரணிக்கு அனுமதி:


வரும் 18ம் தேதி கோவையில் பிரதமர் வாகன பேரணி செல்ல,  கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது. இதை எதிர்த்து பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஆகியவற்றை குறிப்பிட்டு, பிரதமரின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. வரும் 18ம் தேதி கோவை ஆர்.எஸ். புரத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திக்ல் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்படி வரும்போது, கோவை விமான நிலையத்தில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், காவல்துறை அந்த பேரணிக்கு அனுமதி தர மறுத்துவிட்டது. இதை எதிர்த்து கோவை மாநகர பாஜக தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.


நீதிமன்றம் உத்தரவு:


மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி அளித்தார். அதேநேரம், ”வாகனப் பேரணி செல்லும் வழி, தூரம் மற்றும் நேரம் ஆகியவற்றை காவல்துறை முடிவு செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் வாகனப் பேரணியில் பதாகைகள் வைக்க அனுமதியில்லை” என நீதிபதி உத்தரவிட்டார்.


காவல்துறை சொன்னது என்ன?


பேரணிக்கு அனுமதி கோரப்பட்ட  சாய்பாபா காலனி மற்றும் வட பகுதிகளானது பல்நோக்கு மருத்துவமனைகள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலங்கள், போக்குவரத்து பணிமனை, பேருந்து நிலையம், பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை நிறைந்த பகுதிகள் என காவல்துறை தெரிவித்து இருந்தது. . இதனால் பேரணிக்கு அனுமதி வழங்கினால் மக்களின் அன்றாட பணிகள், இதர செயல்பாடுகளுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறு நேரிடும் என காவல்துறை தெரிவித்தது. பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அனுமதி வழங்கினால் மாணவர்கள் தேர்வுக்கு இடையூறு நேரும் எனவும் கூறப்பட்டது. பிரதமருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நிலையில், சாலை மார்க்கமாக சுமார் 4.0 கி.மீ தொலைவிற்கு பேரணி செல்லும் சாலையின் இரு புறங்களிலும் கூடும் பெருந்திரளான மக்களில் ஒவ்வொரு தனி நபரிடமும் அபாயகரமான பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருத்தல் தொடர்பான சோதனைகளை மேற்கொள்வது என்பது மிகுந்த கடினமான செயல் எனவும் காவல் துறையினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தான், பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.