Madurai: அழகர் கோயில் ஆடித் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் ; ஆகஸ்ட் 1ஆம் தேதி தேரோட்டம்

அழகர்கோயில் ஆடித் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம். ஆகஸ்ட் 1ஆம் தேதி தேரோட்டமும், அன்று மாலை பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கதவுகள் திறக்கப்பட்டு சந்தனகாப்பு பூஜையும் நடைபெற உள்ளது.

Continues below advertisement
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்  திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பிரம்மோற்சவ பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி திருவிழாவை காண பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி கட்டி வருவது சிறப்பாக இருக்கும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோவிலில், ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. கள்ளழகர் என்று அழைக்கக்கூடிய சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

 
இதனைத்தொடர்ந்து திருக்கோவில் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் "கோவிந்தா, நமோ நாராயணா" என்ற பக்தி கோஷத்துடன் ஆடிப் பெருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி கிட்டதட்ட 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஸ்வாமி தினசரி காலை தங்கப்பல்லக்கிலும், இரவு தங்க, கருட, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்திலும் எழுந்தருளுவார்.

வரும் 03ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில், ஜூலை 28ஆம் தேதி கள்ளழகர் தங்க்கபல்லக்கில் புறப்பாடாகி திருக்கோவிலில் உள்ள சிவகங்கை சமஸ்தான மறவர் மண்டபத்தில் எழுந்தருளும்  நிகழ்ச்சியும், 31ஆம் தேதி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம் தேதி காலை 08.00 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சகணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து அன்று மாலை ஆடிப் பௌர்ணமியையொட்டி, வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நிகழும். அழகர்கோயில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் திருக்கதவுகள் திறக்கப்பட்டு, 18படிகளுக்கும் சிறப்பு பூஜையும், அதனைத்தொடர்ந்து திருக்கதவுகளுக்கு சந்தனகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

Continues below advertisement


இத்திருவிழாவையொட்டி, திருக்கோவில் சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் ராமசாமி தலைமையில், கண்காணிப்பாளர் பிரதீபா மற்றும் சேகர் மேற்பார்வையில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு  பல்வேறு வசதிகள் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement