கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசி ஆவணப்படத்திற்கு அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்தது. யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் வெளியான பிபிசி ஆவணப்படத்திற்கான லிங் அதிரடியாக நீக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி கேரளாவிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர். அதேபோல, தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மதுரை மீனாட்சி நகர் பகுதியில் மோடியின் ஆவணப் படத்தை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட்டை தடுக்க முற்பட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் உட்பட 7 பேரை கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.




 


 

மதுரை மீனாட்சி நகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மோடியின் ஆவண படத்தை தனியார் மண்டபத்தில் வைத்து வெளியிட்டதாக பா.ஜ.க.,வில் இருப்பவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பா.ஜ.க., மாவட்ட தலைவர் சசிகுமார் உட்பட ஏழு பேர் ஆவண படத்தை தடுக்க முயன்ற போது அங்கு வந்த அவனியாபுரம் காவல்துறையினர் பா.ஜ.க.,வினரை கைது செய்து அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 

மோடி ஆவண படத்தை தடுக்க சென்ற பாஜக மாவட்ட தலைவர் சசிகுமார், பாரதிராஜா, சோலை மணிகண்டன், ஜெயகணேஷ், கருப்பையா மதன் தமிழ்செல்வி, உள்ளிட்ட ஏழு பேரிடம் அவனியாபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவனியாபுரம் காவல் துறையினரை கண்டித்து காவல் நிலைய வாசலில் பாஜகவினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.