தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனைக்கு எதிராக போதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரப்படுகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். கைது நடவடிக்கை, போதை வஸ்துகள் பறிமுதல் என்பதோடு அல்லாமல், நடவடிக்கையின் தீவிரத்தை அதிகப்படுத்தும் விதமாக, கஞ்சா வழக்குகளில் நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவ்வழக்குகளின் குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் அசையும் சொத்துக்களும் அவற்றோடு அவர்களின் அசையா சொத்துக்களையும் முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்காக சரக்கு வாகனத்தில் சுமார் 1000 கிலோ கஞ்சாவை கடத்திவந்த இருவர் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுரை மாநகர் கோச்சடை வழியாக சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக எஸ்.எஸ்.காலனி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான காவல்துறையினர் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட கோச்சடை பகுதியில் அதிகாலையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தினர். மேலும் சரக்கு வாகனத்தில் இருந்த இருவரிடம் வாகனம் குறித்தும் அதில் உள்ள பொருட்கள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் வாகனத்தை சோதனையிட்டனர்.
சோதனையின்போது சரக்கு வாகனத்தில் வாகனத்தில் சரக்கு மூடைகளுக்கு நடுவே சிறு சிறு பொட்டலங்களாக சுமார் 1000 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்திச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்த கோவை பீளமேடு முருகன்கோயில் வீதியைச் சேர்ந்த செந்தில்பிரபு(36), மதுரை மேலமாசி வீதி, சீனிவாசப்பிள்ளை தெருவைச் சேர்ந்த பிரபாகரன்(33) ஆகிய இருவரையும் எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்ற விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை சரக்கு வாகனம் மூலம் கடத்தி வந்து, மதுரையில் பதுக்கி வைத்து தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து வாகனத்தில் பதுக்கிவைத்திருந்த 951 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட சரக்கு லாரி வாகனம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 951 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்மாவட்டங்களில் விற்பனை செய்ய இருந்த 951 கிலோ கஞ்சா கடத்தலை தடுத்து நிறுத்தி இருவரை கைது செய்த நடவடிக்கையில் ஈடுபட்ட எஸ்எஸ் காலனி காவல்துறையினரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்