தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்நிலையங்களை சுற்றுவட்டார பகுதிகளில் திரிந்த 231குழந்தைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர் 

 

வீட்டில் கோபித்துக் கொண்டு வரும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், ஆதரவில்லாத குழந்தைகள் ஆகியோருக்கு புகலிடம் ஆக அமைவது ரயில் நிலையமாக இருந்து வருகிறது. ரயில் நிலையத்தில் இது போன்ற குழந்தைகளை பாதுகாக்க ரயில்வே பாதுகாப்பு படை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில் நிலையத்தில் தஞ்சம் புகும் குழந்தைகளை பாதுகாக்க மத்திய ரயில்வே அமைச்சகம் வழிமுறைகள் வகுத்துள்ளது.



இதன் அடிப்படையில் இந்திய அளவில் 143 முக்கிய ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழந்தைகள் மீட்கும் நடவடிக்கைக்கு சிறிய தேவதைகள் என பெயரிடப்பட்டுள்ளது. காணாமல் போன குழந்தைகள் மீட்கப்பட்ட குழந்தைகள் போன்ற தகவல்கள் trackthemissingchild.gov.in/trackchild/index.php என்ற இணைய இணைப்பு இந்திய ரயில்வே இணையதளத்தில் உள்ளது. இதன் மூலம் காணாமல் போன குழந்தைகள் மீட்கப்பட்ட குழந்தைகள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.



மதுரை கோட்டத்தில் மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மதுரை கோட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில் 176 குழந்தைகள், ராமேஸ்வரம், ராமநாதபுரத்தில் 21 குழந்தைகள் திருநெல்வேலி, செங்கோட்டையில் தலா 9 குழந்தைகள், திண்டுக்கல், தூத்துக்குடியில் தலா 6 குழந்தைகள், விருதுநகரில் 4 குழந்தைகள் மொத்தம் 231 குழந்தைகள் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் மீட்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பெற்றோர் மற்றும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.