மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் மதுரை முத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.



 

 

கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை இந்தியாவில் ஏற்படுத்தும் பாதிப்புகளை உலகமே பெரும் கவலையுடன் பார்க்கிறது. இதன் பேரழிவை கட்டுப்படுத்த சில வழிகள் மட்டுமே உள்ளது அதில், எல்லோருக்கும் மிக விரைவாகத் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வது. நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் அளவுக்கு மருத்துவமனைகளில் இடம் இல்லாதது, தடுப்பூசிகளும் இல்லாதது என இரட்டை தட்டுப்பாடுகளால் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலிலும் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆபத்து என கருதி தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.

 



 

ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், பிரபலங்கள் என தடுப்பூசியையே பரிந்துரை செய்கின்றனர். இந்நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை அருகில் உள்ள  மாநகராட்சி பள்ளியில் செயல்படும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கொரோனா தடுப்பூசி குறித்து கூடுதல் விழிப்புணர்வு மக்களிடையே தேவைப்படுகிறது. கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அவரவர் குடும்ப நலனுக்காகவே அரசு அறிவுறுதலின் படி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்"

 



 

தடுப்பூசி போட்டது குறித்துABP நாடு செய்தி குழுமத்திற்கு மதுரை முத்து அளித்த பிரத்யேக பேட்டியில், " மக்களிடம் கொரோனா குறித்த அச்சம் விலகவில்லை. அவங்களுக்கு வந்துருச்சு... நமக்கும் வந்துரும்... என்று பயப்படுகின்றனர். கொரோனா சமயத்தில் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை, கவனமாக இருந்தால் போதும். ஒருவருக்கு கொரோனா வந்து இறப்பு ஏற்பட்டால்  நாமும் இறந்துவிடுவோம் என்று நினைக்ககூடாது. முடிந்தவரை கொரோனா வராமல் தவிர்க்க வேண்டும். வந்துவிட்டால்  மருத்துவர் ஆலோசனையோடு தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சை பெற வேண்டும். விவேக் சார் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் இறந்தார் என்ற தவறான தகவல் பரவியதால் மக்கள் கூடுதல் அச்சமடைந்துள்ளனர். என்னிடம் கூட பலர் ஊசி போட்டுக்க வேண்டாம் என்று தெரித்தனர்.

 



 

அது முற்றிலும் விழிப்புணர்வு இல்லாத கருத்து. அவருக்கு வேறு காரணத்தால் இறப்பு ஏற்பட்டிருந்தாலும் தடுப்பூசியால் இறந்தார் என்று பலரும் அச்சப்பட்டுள்ளனர். அந்த காலத்து மூட நம்பிக்கை போல தற்போதும் இருக்கக் கூடாது. கொரோனாவால் இறந்தவர்களோடு ஒப்பிட்டு கொள்ளக் கூடாது. எனவே இது போன்ற விசயங்களில் மருத்துவர்கள் மீடியா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் நான் சொல்வதை கூட கேட்கவேண்டாம் மருத்துவர் சொல்வதை கேட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார்.