திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ள காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துப்புளி கிராமம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சனூத்து எனும் மலையடிவார பகுதி. இங்குள்ள வனப்பகுதியில் பளியர் இனத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். சிறு குன்றின்மீது குடிசை அமைத்து 14குடும்பங்களில் 42பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 1992ம் ஆண்டு அன்றைய தமிழக அரசு வனப்பகுதிக்குள் வசித்துவந்த இவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவதாக கூறி வனத்திற்கு வெளியே அழைத்து வந்தது. இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக எவ்வித வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து பழங்குடியின மக்கள் தெரிவித்ததாவது, வீடு, நிலம் தருவதாகக்கூறி வனத்திற்குள் இருந்து தாங்கள் அழைத்து வரப்பட்டதாகவும், இதன்படி மண்திட்டு, மஞ்சனூத்து,கத்தாளம்பாறை உட்பட பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலமாக 65ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதில் ஒரு குடும்பத்திற்கு 2ஏக்கர் அளவு நிலம் கொடுத்து வீடு கட்டி கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 30ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எவ்வித வசதிகளும் கிடைக்கவில்லை. தற்போது அரசுக்கு சொந்தமான அந்த புறம்போக்கு நிலங்களும் பலரது ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகி தற்போது இடம் தனியார்கள் சிலரால் கையகப்பட்டுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.மேலும் வீடு, மின்சாரம், குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் தினமும் துயரத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
காடுகளில் உள்ள கடுக்காய்,நெல்லிக்காய்,சீமாறு ஆகியவற்றை சேகரித்தும், விவசாய நிலங்களில் கூலிவேலை செய்தும், கூலிக்கு ஆடுகள் மேய்த்தும் பிழைப்பு நடத்துவதாகவும் தெரிவித்தனர். மின்சாரம் இல்லாதநிலையில் அருகிலுள்ள அரசுபள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சூரிய ஒளி மின்சக்தி பொறுத்தி கொடுத்ததால் தற்போது இருட்டில் இருந்து தற்காலிக விடுதலை கிடைத்துள்ளது என்றாலும், தங்களுக்கான ரேஷன் கார்டுகள் இல்லை. தங்கள் குழந்தைகளுக்கு பழங்குடியினர் என சாதிச்சான்று தர அதிகாரிகள் மறுக்கின்றனர். இதுபோன்ற எந்தவொரு ஆவணமும் இன்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும்,
இதன் காரணமாக கொரோனா காலங்களில் அரசு அறிவித்துள்ள நிவாரணம் எதுவும் கிடைக்காமல் வறுமையில் வாடி வருவதாகவும் தெரிவித்தனர். எனவே அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல், காடுகளில் இருந்து ஊருக்குள் வந்தும் இன்னும் வனவாழ்க்கையே என தெரிவிக்கின்றனர். தினசரி வாழ்க்கை நடத்துவதற்கு கூட கடினமான நிலையில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகளும், குறைந்தபட்ச வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
''இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!