அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ஆதரவாகவும், திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உட்பட 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

 

மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்


பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவைகளை தடுக்க தவறியதாகக் கூறி, தி.மு.க., அரசின் ஆட்சியை கண்டித்து மதுரை மாநகர்  மாவட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் மதுரை செல்லூர் 60 அடி ரோட்டில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


 

தடையை மீறி 1000க்கும் மேற்பட்ட நபர்கள் ஆர்ப்பாட்டம்


 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு 3 காவல்துறை வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சரவணா இன்ஸ்டியூட்  கல்லூரியை சேர்ந்த செவிலியர்கள் கையில் யார் அந்த சார்.?_ _Save our daughter._ என்ற வாசகத்துடன் பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் போராட்டம்


அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கல்லூரி மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பாதிப்புக்கு ஆளான மாணவிக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவளித்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கல்லூரி மாணவிக்கு ஆதரவாக அதிமுக சார்பிலும், பாஜக சார்பிலும் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிர் இழந்த நிலையில் இந்த போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

 

200க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்


இந்த நிலையில் மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பிலும், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் மதுரை செல்லூர் 60 அடி சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தலைமையில் தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவர்களை கைது செய்வதற்காக தற்போது காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். தடை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் உட்பட 200க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அருகில் இருக்கக்கூடிய தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர்