Nathan Lyon: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் முடிவில், ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


369 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா:


மெல்போர்னில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நிதிஷ் குமார் ரெட்டியின் சதம் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அரைசதத்தால் ஃபாலோ-ஆனை தவிர்த்தது. தொடர்ந்து, இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியதும் 369 ரன்களை சேர்த்து இந்திய அணி ஆட்டமிழந்தது.



தடுமாறிய ஆஸ்திரேலியா:


இதையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. பும்ரா மற்றும் சிராஜின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், ஒரு கட்டத்தில் 91 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதன் மூலம், இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் எளிய இலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


சரிவில் இருந்து மீட்ட கம்மின்ஸ் - லபுசக்னே


ஆனால், 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கம்மின்ஸ் மற்றும் லபுசக்னே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவில் இருந்து மீட்டனர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுசக்னே 70 ரன்களை சேர்த்து பெவிலியன் திரும்பினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த கம்மின்ஸ் 41 ரன்கலை சேர்த்தார். இந்த ஜோடி 7வது விக்கெட்டிற்கு 57 ரன்களை சேர்த்தது.


சம்பவம் செய்த நாதன் லயன்:


10வது வீரராக களமிறங்கிய நாதன் லயன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கடைசி விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் திணறினர். கேட்ச் பிடிக்கப்பட்ட பந்துகள் நோ பாலாகவும் மாறி ரசிகர்களை சோதித்தது. நாளின் முடிவில் 54 பந்துகளை எதிர்கொண்ட லயன், 5 பவுண்டரிகள் உட்பட 41 ரன்களை சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் கடைசி விக்கெட்டிற்கு போலண்ட் உடன் ஜோடி சேர்ந்து, 55 ரன்களை சேர்த்துள்ளார். ஆஸ்திரேலிய அணி நாளின் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை சேர்த்துள்ளது. அதன்மூலம், 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. போட்டியில் நாளை ஒருநாள் மட்டுமே மீதமிருப்பதால், வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. உலக டெஸ்ட் சம்ம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.