மதுரை மாவட்டத்தில் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மழை கால ஆய்வுக் கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அ. அருண் தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அ. அருண் தம்புராஜ், தெரிவிக்கையில்...,” மதுரை மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை பங்கேற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறைகளுடன் இணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெய்த மழையின் போது இரண்டு அடிக்கு மேல் நீர் தேங்கிய நகர்ப்புற பகுதிகளில் 16 இடங்கள் கிராமப்புற பகுதிகளில் 11 இடங்கள் என 27 இடங்கள் பாதிக்கப்பட்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பேரிடர் கால ஒத்திகை
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24/7 செயல்படும் அவசர மையமும், மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு மையமும் நிறுவப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றன. பாதிக்கப்படக் கூடிய இடங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும் உணவு வழங்குவதற்கும் நகர்ப்புற பகுதிகளில் 78 கிராமப்புறப் பகுதிகளில் 47 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வருகின்ற வெள்ளிக் கிழமை அன்று வட்ட அளவில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தன்னார்வலர்களை கொண்டு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்தவும் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடையில்லா மின் விநியோகம்
கன மழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து அளவிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது பெய்த மழையினால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கிய மழை நீர் விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை காலத்தில் அனைத்து மருத்துவமனையிலும் தடையில்லா மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மின்னாக்கியில் போதிய எரிபொருள் இருப்புடன் தாயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. பழுது அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்கள் உடனடியாகக் இடிக்க வேண்டும். மேலும் தனியாருக்கு சொந்தமான பழுது அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள் இடிப்பதற்கு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், திட்ட இயக்குநர் வானதி அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.