மருதுபாண்டியர் குரு பூஜை மாவட்டத்தில் 2ஆயிரத்து 200போலீசார் பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல்.
போலீஸ் பாதுகாப்பு
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் (அக்.27) நடக்க உள்ள மாமன்னர் மருதுபாண்டியர் 224வது குரு பூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2ஆயிரத்து 200போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காளையார்கோவிலில் மாமன்னர் மருதுபாண்டியர் 224வது குரு பூஜை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் போலீஸ் கண்காணிப்பு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.
பல்வேறு அமைப்பில் இருந்து பாதுகாப்பு
தென்மண்டல ஐஜி பிரேம்ஆனந்த்சின்கா, டிஐஜி(ராமநாதபுரம் சரக) மூர்த்தி மேற்பார்வையில் சிவகங்கை எஸ்பி சிவபிரசாத் மற்றும் 1எஸ்பி, 6ஏடிஎஸ்பி, 20டிஎஸ்பி, 70இன்ஸ்பெக்டர்கள், 200எஸ்ஐக்கள், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த 900போலீசார் மற்றும் பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்ட வெளி மாவட்ட போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
இவர்கள் மாவட்டம் முழுவதும் 240இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொபைல் போலீஸ் 25, டூவீலர் போலீஸ் 50, அதிரடி விரைவு படை 10ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 2ஆயிரத்து 200போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கீழச்சீவல்பட்டி, மானாமதுரை சிப்காட், சிவகங்கை மற்றும் மாவட்ட எல்கை உள்ளிட்ட 16முக்கிய இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆறு இடங்களில் ஆன்லைன் பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் சுழலும் கேமராக்கள் மற்ற இடங்களில் சிசிடிவி கேமரா மற்றும் ஸ்டில் கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வாகன பரிசோதணை நடக்க உள்ளது.
போதிய அளவிற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன
குரு பூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்லக்கூடாது என்பதால் போதிய அளவிற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே அனுமதி அட்டையுடன் வரும் வாகனங்கள் எளிதாக செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் தொடர்ச்சியாக மூன்று வாகனத்திற்கு மேல் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் 163(144)தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொதுநிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.