துபாய் வேலைக்காக சென்ற மதுரை இளைஞர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

கனவுகளுடன் துபாய் சென்ற இளைஞர் 


 

மதுரை மாவட்டம் மேலூர், எட்டிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் பிரகாஷ் (35). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசு போட்டித் தேர்வு முயற்சி செய்தார். தொடர்ந்து திருமணமான பின் குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டிற்கு வேலை செய்ய முயற்சி எடுத்து, துபாயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் துபாயிலிருந்து சொந்த ஊருக்கு பிரகாஷ் வந்திருந்தார். இதையடுத்து உடனடியாக பணிக்கு திரும்புமாறு அவர் பணி செய்யும் நிறுவனத்தினர் அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பிரகாஷ் மதுரையிலிருந்து விமானம் மூலமாக துபாய்க்கு கிளம்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மதுரையில் மீண்டும் தரையில் இருக்க முடியாத நிலையில் கொச்சின் விமான நிலையத்தில் அந்த விமானமானது தரையிறங்கியது. இந்த சூழ்நிலையில் அங்கிருந்து பிரகாஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், ஏற்கனவே அவர் விமானத்திலேயே இறந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது, பிரகாஷின் உடல் சொந்த ஊரான எட்டிமங்கலத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

 

மாரடைப்பால் விமானத்தில் மரணம்


 

இந்த சூழ்நிலையில் இதுகுறித்து பிரகாஷின் மைத்துனர் வினோத் நம்மிடம் சொல்லும்போது...,” என் மாமா கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவருக்கு மிகுந்த மன அழுத்தம் இருந்ததாக அப்போது தெரிவித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். அப்போது விரைவாக பணிக்கு திரும்புமாறு அவர் பணிபுரிந்த நிறுவனத்தைச் சார்ந்த நபர்கள் அழைத்தனர். இதனால் அவர் உடனடியாக ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அவரது நெஞ்சில் சளி இருப்பதாக மருத்துவர்கள் சொல்லி இருந்தனர். ஆனாலும், அவர் பணிபுரியும் அலுவலகம் கொடுத்த அழுத்தத்தால் அவர் உடனடியாக கிளம்ப வேண்டியிருந்தது. இதற்காக மதுரையிலிருந்து விமானம் மூலம் கிளம்பும்போது, விமானம் செல்லும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கொண்டு செல்லும் முன் உயிரிழந்தார். இது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வேதனையாக உள்ளது. மாமாவின் இறப்பை ஜீரணிக்க முடியாமல் இருக்கிறோம். இதனை எப்படி நாங்கள் சரிகட்ட போகிறோம் என்று தெரியவில்லை” என கண்கலங்கி நம்மிடம் கூறினார்.