Vidaamuyarchi day 1 collection: அஜித்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின், உலகளாவிய முதல் நாள் வசூல் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி
கடந்த 2023ம் ஆண்டு வெளியான துணிவு திரைப்படத்திற்குப் பிறகு, சுமார் 2 ஆண்டுகள் இடைவெளியில் அஜித்குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் என பெரும் நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கதைக்களம்
திருமணமான 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ அஜித்தும், த்ரிஷாவும் முடிவு எடுக்கின்றனர். அதற்காக த்ரிஷாவை அவரது வீட்டில் விடுக்க செல்லும்போது, அவர் கடத்தப்படுகிறார். இதையடுத்து தனது மனைவியை அஜித் மீட்டாரா? இல்லையா? அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா என்பதே படத்தின் ஒன்லைன். பெரும் இடைவெளிக்குப் பிறகு வெளியான விடாமுயற்சி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நேற்று வெளியான படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.. வேலைநாட்களிலேயே வெளியான இப்படம் முதல் நாளில் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி முதல்நாளில் ரூ.50 கோடி வசூல்?
அஜித்தின் விடாமுயற்சிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெடுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் முதல் நாளிலேயே ரூ.22 கோடி கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான அஜித்தின் துணிவு படம் முதல் நாளிலேயே 23 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. நாடு மூழுவதும் சேர்ந்து இப்படம் 30 முதல் 35 கோடி ரூபாய் வசூலித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. சர்வதேச அளவில் 17 முதல் 18 கோடியை மொத்த வசூலாக பதிவு செய்து இருக்கலாம் என தெரிகிறது. அதன்படி, முதல் நாளிலேயே விடாமுயற்சி திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.46 முதல் ரூ.50 கோடி வரை வசூல் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேநேரம், திரையுலகில் அஜித்தின் போட்டியாளராக கருதப்படும், விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தி கோட். இப்படம் முதல் நாளிலேயே சர்வதேச அளவில் ரூ.126.32 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வசூல் அதிகரிக்குமா?
நேற்றும், இன்றும் வழக்கமான வேலை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மந்தமாகவே இருக்க வாய்ப்புயுள்ளதாகவும், நாளை முதல் வார இறுதி தொடங்குவதால் விடாமுயற்சி படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் சினிமா துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
.