Thirupparankundram Hill: திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? ஆங்கிலேயர் ஆட்சியிலேயே வெடித்த சர்ச்சை - 1931ல் நீதிமன்ற தீர்ப்பு என்ன தெரியுமா?
Thirupparankundram Hill Case: ஆங்கிலேயேர் ஆட்சி காலத்திலேயே வெடித்த திருப்பரங்குன்றம் மலை தொடர்பான, வழக்கின் தீர்ப்பு குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Thirupparankundram Hill Case: ஆங்கிலேயேர் ஆட்சி காலத்திலேயே வெடித்த திருப்பரங்குன்றம் மலை தொடர்பான, வழக்கை பிரிவி கவுன்சில் விசாரித்து தீர்ப்பளித்தது.
திருப்பரங்குன்றம் மலை வழக்கு
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மதநல்லிணக்கத்தின் அடையாளமாக போற்றப்படும் இந்த மலை, இன்று மதத்தின் அடிப்படையில் பிரிவினையை தூண்டுவதற்கான கருவியாக பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவிக்கின்றனர். அதேநேரம், திருப்பரங்குன்றம் மலையை மையப்படுத்தி பிரச்னை எழுவது என்பது இது முதல்முறையல்ல. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்த பிரச்னை எழுந்தது. உள்நாட்டு விசாரணையை தாண்டி, பிரிட்டிஷ் ஆட்சியின் தலைமை விசாரணப்பிரிவாக கருதப்படும் பிரிவி அமைப்பு இதுதொடர்பான விசாரணையை நடத்தி தீர்ப்பளித்தது. தற்போது மீண்டும் வெடித்துள்ள சர்ச்சைகளின் விளைவாக, 94 ஆண்டுகளுக்கு முன்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில் என்ன கூறப்பட்டது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
1931ல் வெடித்த சர்ச்சை:
1900-களின் தொடக்க காலத்தில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்னை வெடித்தது. அதில், விவசாயம் செய்யப்படும் ஒரு பகுதி நிலம், தர்கா அமைந்துள்ள பகுதி ஆகியவை தவிர மொத்த மலையும் கோவில் சொத்து என்று கோவில் நிர்வாகம் உரிமை கோரியது. ஆனால், தர்கா அமைந்துள்ள பகுதியும், நெல்லித்தோப்பு என்று அழைக்கப்படும் மலையின் ஒரு பகுதியும் தங்களுக்குச் சொந்தம் என்று இஸ்லாமியர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆங்கிலேயர் அரசாங்கத்தின்படி, மலையில் உள்ள அனைத்து ஆக்கிரமிக்கப்படாத நிலங்களும் அரசாங்கத்திற்கு சொந்தமானது என்று காலனித்துவ நிர்வாகம் வாதிட்டது, ஏனெனில் அது " பாழ் நிலம் " என்று கருதப்பட்டது. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்.,கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன. இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் ஆகும்.
1932 நீதிமன்ற தீர்ப்பு
இந்த வழக்கு முதன்முதலில் 1923 ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதன் முடிவில் தீர்ப்பு கோவில் நிர்வாகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்டு,பல நூற்றாண்டுகளாக மலையின் மீது அந்த அமைப்பு கொண்டிருந்த கட்டுப்பாட்டை அங்கீகரித்து. அதாவது நிலத்திற்கான உரிமையை அதிகாரப்பூர்வமாக வழங்கியது. இருப்பினும், அது இரண்டு விதிவிலக்குகளை விதித்தது. அதன்படி, மசூதி அமைந்துள்ள இடம், அதன் கொடிக்கம்பம் மற்றும் அதன் அணுகல் படிகள் மற்றும் நெல்லிதோப் பகுதி இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்டது . பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது.
1926 - சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
மதுரை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்ற, 1926ல் வழங்கிய தீர்ப்பில் இஸ்லாமியர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் என இருதரப்பின் கோரிக்கையையும் நிராகரித்தது. மலை முழுவதும் அரசுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளித்தது.
1931 - லண்டன் வரை நீண்ட வழக்கு:
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மிக உயர்ந்த சட்ட அதிகார அமைப்பான பிரிவி கவுன்சிலில் கோவில் நிர்வாகம் முறையிட்டது. வரலாற்று பதிவுகளை மதிப்பாய்வு செய்த பிரிவி கவுன்சில், 1931ல் விரிவான உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, மதுரை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- இந்தக் கோயில் பல நூற்றாண்டுகளாக இருந்திருக்கலாம், அநேகமாக 13 ஆம் நூற்றாண்டிலிருந்து அல்லது அதற்கு முந்தையதாக இருக்கலாம்.
- அந்த முழு மலையும் புனிதமாகக் கருதப்பட்டது, மேலும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் "சுவாமிமலை" (கடவுளின் மலை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தக் கோயில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமையைப் பெற்று, கோயில் சாலைகளைப் பராமரித்தல், கட்டமைப்புகளைப் பழுதுபார்த்தல் மற்றும் நிலத்தை நிர்வகித்தல் ஆகியவற்றைச் செய்து வந்தது.
- இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மலையைக் கைப்பற்றியதாகவோ அல்லது கோயில் நடவடிக்கைகளை சீர்குலைத்ததாகவோ எந்த வரலாற்று ஆதாரமும் கூறவில்லை.
- கோயிலின் தீவிர பயன்பாட்டில் இருந்ததால், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் "பாழ் நிலம்" என்ற கூற்று செல்லாது, என்பவை நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களாகும்.
இறுதி தீர்ப்பு:
பிரிவி கவுன்சில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து 1923 ஆம் ஆண்டு தீர்ப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தியது. அது பின்வருவனவற்றை உறுதிப்படுத்தியது:
- மசூதி அமைந்துள்ள பகுதி மற்றும் நெல்லித்தோப்பு நிலத்தைத் தவிர, திருப்பரங்குன்றம் மலையை முருகன் கோயில் சட்டப்பூர்வமாகச் சொந்தமாக்கிக் கொண்டது.
- மசூதி அதன் குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து இருக்க முடியும், ஆனால் பரந்த மலை கோயில் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
அந்த தீர்ப்பின்படி, திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் மதநல்லிணக்கத்தோடு வழிபாடுகளை நடத்தி வருகின்றன. ஆனால், யாரோ ஒருசிலர் தங்களது சுய லாபத்திற்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அதன் விளைவாகவே அண்மையில் அங்கு வலது சாரிகள் தரப்பில் மாபெரும் ஆர்பாட்டம் நடந்ததாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரிவி கவுன்சிலின் முக்கியத்துவம்:
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், மன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் பிரிவி கவுன்சில். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த கவுன்சில் தான், இறுதி அதிகாரம் படைத்த வழக்கு விசாரணை அமைப்பாகும். இந்திய நீதிமன்றங்களில் தீர்க்க முடியாத வழக்குகள் பிரிவி கவுன்சிலில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டன. அந்த வகையில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கையும், பிரிவி கவுன்சில் விசாரித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.