போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளக்கூடாது என மதுரை மாநகர வடக்கு துணை ஆணையர் அனிதா காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.


 

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராட்டம்


டங்ஸ்டன் சுரங்க அமைப்பதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து, முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் சங்கம், கிராம பொதுமக்கள் சார்பில் மேலூரிலிருந்து மதுரை மாநகரில் அமைந்துள்ள தமுக்கம் தலைமை தபால் நிலையம் வரை பேரணியாக வருகை தந்து போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதனால் மதுரை மாநகரில், ராஜா முத்தையா மன்றம், மாநகராட்சி நீச்சல் தொட்டி, காந்தி அருங்காட்சியம் மற்றும் ராஜாஜி பூங்கா வழியாக தமுக்கம் வரை 4 இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


 

காவல்துறை கட்டுப்பாட்டில் சாலைகள்


 

மேலும், பேரணியில் ஈடுபடும் நபர்களுக்கு எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக 108 ஆம்புலன்ஸ்களும் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல் மண்ணெண்ணெய் ஆகிய பொருட்களுடன் வருகை தருபவர்களை கையாளுவதற்காக தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் போலீசார் தயார் படுத்தப்பட்டனர். ராஜா முத்தையா மன்றம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை அதேபோல் தமுக்கம் செல்லும் சாலை முற்றிலுமாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தல்லாகுளம் வழியாக தமுக்கம், கோரிப்பாளையம் செல்லும் சாலையில் சாலை முழுவதும் வாகனம் அணிவகுத்து காணப்படுகிறது.

 

கண்ணிய குறைவாக நடந்துகொள்ளக் கூடாது


 







இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மாநகர காவல்துறையினரிடம் பேசிய மதுரை மாநகர காவல்துறை வடக்கு துணை ஆணையர் அனிதா விவசாயிகள் போராட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ள நிலையில், காவல்துறையினர் அவர்களிடம் கண்ணிய குறைவாக நடந்துகொள்ளக் கூடாது எனவும் அறிவுரை வழங்கியுள்ளார். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மேலூரில் இருந்து மதுரை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் நான்காயத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால் மதுரை முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரத்து செய்யகோரியும், மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

தொடர்ந்து வழி நெடுகிலும் கூட்டம் காணப்பட்டது, மதுரை உயர்நீதிமன்றம் அருகில் உணவுகள் வழங்கப்பட்டு போராட்டக்காரர்கள் உணவு அருந்தினர். தொடர்ந்து பேரணி எல்கையை நெருங்கிவருகிறது.ன் மேலூர் பகுதியில் அரிட்டாபட்டி மட்டும் அல்ல மேலூரில் எந்த பகுதியிலும் டங்ஸ்டம் திட்டம் கொண்டுவரக்கூடாது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.