அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

 

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி 

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி அவனியாபுரம், 15ஆம் தேதி பாலமேடு, 16ஆம் தேதி உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகிய 3போட்டிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் முன் பதிவு தொடங்கியது மாலை 5 மணிக்கு madurai.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள், காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்துவருகின்றனர்.

 


 

ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு என்ன தேவை

 

ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் போது காளைகளுக்கான பதிவில் காளையின் இனம், பூர்வீகம், வயது,  பல்வரிசைகள், நிறம், கொம்பின் நீளம், காளையின் உயரம், காளையின் அடையாளங்கள், கொம்புகளுக்கு இடையே உள்ள இடைவெளி, கால்நடை மருந்தகத்தின் பெயர், தடுப்பூசி விவரங்கள், காளையின் மருத்துவச் சான்றிதழ், காளையின் படம், உரிமையாளர் & உதவியாளருடன்  புகைப்படம் என்ற ஆவணங்களுடன் ஜல்லிக்கட்டு காளையை துன்புறுத்தாமல் விதிகளுக்கு உட்பட்டு போட்டியில் கலந்துகொள்வோம் என்ற உறுதிமொழியிலும் ஒப்பதல் அளித்த பின்னரே முன்பதிவு செய்யப்பட்டுவருகிறது. இதேபோன்று மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவில் மாடுபிடி வீரரின் கைபேசி எண், ஆதார் எண்,  பெயர், வயது,  முகவரி, மின்னஞ்சல், எடை, இரத்த வகை , உயரம், காளையை அடக்குபவர் மருத்துவச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்த பின்னர் முன்பதிவு செய்யப்படுகிறது.

 

ஆன்லைன் மூலமே டோக்கன் பதிவிறக்கம்

 

இன்று மாலை 5மணி வரை 3இடங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யப்படுகிறது. பதிவின் போதே எந்த போட்டியில் கலந்துகொள்ளபோவது குறித்தும் தகவல் அளிக்க வேண்டும், ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரரோ, காளைகளோ மற்றும் போட்டியில் கலந்துகொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. பதிவு செய்யப்பட்ட காளை மற்றும் மாடுபிடி வீரர்களின் ஆவணங்களை பொறுத்து அவர்களுக்கான அனுமதி சீட்டு ஆன்லைனிலயே டவுண்லோட் செய்துகொள்ளலாம்,  இதனையடுத்து போட்டிக்கு வரும் முன்பாக முன்பதிவு டோக்கனை எடுத்துவந்தால் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் மூலமாக பதிவு தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள்,  காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். முறைகேடுகளை தடுக்க QR code இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஆன்லைன் மூலமே டோக்கன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.