மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அறிவிப்பு: முதல்வரை குடும்பத்தினர் உடன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

 

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

 

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு குறித்த முன்னாள் அமைச்சர்  செல்லூர் ராஜூவின் கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளிக்கையில், ”மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 2025 டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும் என்று  அறிவித்தார்”. இதனையடுத்து கோயில் இடம் பெற்றுள்ள மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான முனைவர் பழனிவேல் தியாகராஜன், மீனாட்சி அம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழு  தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடன் இணைந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

 

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

 

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா எதிர்வரும் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  சமீபத்தில் சட்டப்பேரவையில் உறுதியளித்ததற்காக, மீனாட்சி அம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவரான என் தாயார்  ருக்மணி பழனிவேல் ராஜன்  மற்றும் என் குடும்பத்தினருடன், கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து நன்றியினைத் தெரிவித்து மகிழ்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மீனாட்சியம்மன் கோயிலில் வசதி

 

முன்னதாக மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெறுவதற்கு முன்பாக கோயிலின் வெளிப்புற தோற்றம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை சிறப்பிக்கும் வகையில் ஏற்கனவே கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குடிநீர், கழிப்பறை, பாதாளசாக்கடை, சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கே பக்தர்களுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுத்து வருகிறார். மேல கோபுர வீதியில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணியை ஆய்வு செய்து அதனையும் துரிதப்படுத்தி உள்ளார். மேலும் கீழ சித்திரை வீதி மீனாட்சி பூங்கா பராமரிப்பு குறித்தும் ஆலோசனை வழங்கி அதிகாரிகளை நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி உள்ளார்.

 

கோயில் குடமுழுக்கு

 

வீர வசந்தராயர் மண்டப கட்டுமான பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படி, கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் அவர்களுடன் இணைந்து தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.