மதுரையில் மருத்துவர்கள் பரிந்துரை இன்றி மாத்திரைகள் விற்பனை புகார்கள் எதிரொலி -  அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி கட்டாயம் அமைக்காவிட்டால், சட்டப்படி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

போதைப் பொருள் பயன்பாடு:


கடந்த சில மாதங்களாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறார்கள் அதிகளவிற்கு மனநல சிகிச்சைகள் சார்ந்த தூக்கம் தரும் ( போதை) மாத்திரைகள் மற்றும்  டானிக்குகளை பயன்படுத்திவருவதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துவருகிறது. 

 




 

கண்காணிப்பு கேமராக்கள்:


 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலகு சார்பில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் இதுபோன்ற சிறார்கள் போதைக்கு அடிமையாவதை கட்டுப்படுத்த எந்தவித மருத்துவர் பரிந்துரைகள் இன்றி அதிகளவிற்கு தூக்கம் தரும்  மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

 

இந்நிலையில் இது தொடர்பாக மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மாவட்ட தலைவரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சங்கீதா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”மதுரை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம்- 1940 மற்றும் விதிகள் 1945 அட்டவணைகள் "X" and மன நல சார்ந்த சிகிச்சைகள் தொடர்பான  'H', 'H1'Drugs" குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1973 பிரிவு 133 இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று தொடங்கி  30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் அந்தந்த கடைகளில் பொருத்தப்பட வேண்டும் எனவும்,
  



 

தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களில் உரிமையாளர் மீது மேற்கண்ட உத்தரவினை பின்பற்றாததிற்காக உரிய சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

30 நாட்கள் அவகாசம்:


 

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக்கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி கேமிராக்கள் வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில் கேமிராக்கள் பொறுத்துவது குறித்து அதிகாரிகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.