பூக்கள் விளைச்சல் அதிகமாக இருப்பதால் முகூர்த்த நாட்களில் கூட விலை பெரிதாக உயரவில்லை - என வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.


மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட் நிலவரம்


மீனாட்சியம்மனுக்கு அடுத்தபடியாக மதுரை என்றதும் நினைவிற்கு வருவது மல்லிகைப் பூ தான். தனித்துவமான நிறம், வாசனை, பூவின் கெட்டித் தன்மை என்று மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் விளையக்கூடிய பூக்களுக்கு தனி மவுசு உள்ளது. இதனால் மதுரை மல்லிகைப் பூக்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடு என நாள்தோறும் டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


ஆன்மீகநகரமாக கருதப்படும் மதுரையிலிருந்து பூக்களை வாங்க வியாபாரிகள் பெரிதும் விரும்புகின்றனர். மதுரையில் கிடைக்கும் பூக்கள் தான் வாசனை திரவியங்களுக்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆண்டின் தொடக்கம் முதலே மல்லிகைப் பூ உள்ளிட்ட மற்ற பூக்களின் விலை உச்சத்தில் இருந்தது. அதாவது கிட்டதட்ட மல்லிகைப் பூவின் விலை கிலோ 5 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்தது. இந்த சூழலில் முகூர்த்த நாட்கள் இருந்த போதிலும் பூக்களின் விலை குறைந்தே காணப்படுகிறது. 


மல்லிகைப் பூ விலை ரூ.400


மதுரையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பனி கொட்டோ, கொட்டு என்று கொட்டியது. மதுரையா ? கொடைக்கானலா ? என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில் பனிப் பொழிவு இருந்தது. இதனால் பூக்கள் விலை உச்சம் தொட்டது. தற்போது அந்த நிலை மாறி பூக்களின் விலை தலைகீழாக மாறியுள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாகியுள்ளது. வெயில் அதிகரிப்பால் பூக்களின் விளைச்சல் சிறப்பாக உள்ளது. இதனால் ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இருந்த மல்லிகைப் பூ கிலோ ரூ.400க்கு விற்பனையாகிறது. தரமான மல்லிக்கை கிலோ ரூ.600க்கும் விற்பனையானது.


முகூர்த்தம் இருந்தும் விலை குறைவு


அதே போல் சம்மங்கிப் பூ கிலோ ரூ.200க்கும், செண்டுமல்லி கிலோ ரூ20க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.60க்கும், அரளி கிலோ ரூ.60க்கும், முல்லைப் பூ ரூ60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் விளைச்சல் அதிகமாக இருப்பதால் முகூர்த்த நாட்களில் கூட விலை பெரிதாக உயரவில்லை என மதுரை மாட்டுத்தாவணி மலர் கமிஷன் வியாபாரிகள் நலச்சங்கத் துணைத் தலைவர் கே.எம்.கே. பார்த்திபன் தெரிவித்தார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Patanjali Food And Herbal Park: அடடே..! வருகிறது பதஞ்சலியின் உணவு & மூலிகை பூங்கா - இவ்ளோ சிறப்பம்சங்களா? ஆசியாவிலேயே?


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sellur Raju : மும்மூர்த்தி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.. அமைச்சரை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜூ !