இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்படவேண்டும்’ தொல்லியல் ஆய்வுகள் குறித்த விவரங்களை வெளியிட்டு பெருமிதம் பொங்க சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தி.மு.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் தொல்லியல் அகழாய்வுகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருவதை யாரும் மறுத்துவிட முடியாது. ஒவ்வொரு நாளும் தனது ட்விட்டர் பக்கத்தில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகழாய்வுகளில் கிடைக்கப்பெறும் சான்றுகளை பதிவிட்டு மகிழ்வதே அதற்கு சான்று.

 


 

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் ”தமிழ் சமூகம் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சங்க இலக்கிய சமூகம் என்று தெரிவித்தது கீழடி தொல்லியல் ஆய்வு. பண்டைய நாகரிகம் கொண்ட மண் தமிழ்நாடு என்பதற்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன. 1990 இல் கடல்சார் ஆய்வுக்கு பெரும் திட்டம் தீட்டியதும், பூம்புகாரில் கடலுக்கு அடியில் சில கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டதும் கலைஞரால் தான். வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை அமைத்தது, தமிழ் வாழ்க என எழுத வைத்தது, தமிழ் வழிபாட்டு உரிமை வழங்கியது, தமிழை கணினி மொழியாக்கியது, உலகம் முழுவதும் தமிழை பரப்பியது, செம்மொழி மாநாடு நடத்தியது என தமிழ் அரசை நடத்தியதுதான் தி.மு.க அரசு தான். கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது .கீழடி அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசு பாதியில் கைவிட்டது’.

 


கீழடியில் கிடைக்கப் பெற்ற வெள்ளிக் காசுகுறித்த செய்தி படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கி.மு 200 முதல் 600.. வணிகம் செய்ததற்கான சான்று : கீழடியில் கண்டெடுக்கப்பட்ட வெள்ளி நாணயம்..!

 

மேலும்..” கீழடியில் கி.மு 4 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த வெள்ளிக்காசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அகழாய்வு நடைபெறும் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொற்கை துறைமுகம் கிமு 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருநை ஆற்றங்கரையில் நாகரீகம் 3700 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அகழாய்வு பணிகளுக்கு ரூபாய் 5 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.



 

 

இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்." தமிழ்நாடு சட்ட பேரவையில் விதி எண் 110 இன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை, இந்திய வரலாற்றின் விதிகளை மாற்றும் அறிக்கையாகும். புராணங்களை வரலாறு என பொய்யர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் வைகை, பொருநை என்று ஆற்றங்கரை தோறும் அறிவியல் துணையோடு உண்மையான வரலாறு மீட்டெடுக்கப்படுகிறது.



 

கீழடியில் கண்டறியப்பட்ட வெள்ளி முத்திரை நாணயம் மெளரியர் காலத்திற்கு முற்பட்டது. பாண்டியனின் கொற்கை துறைமுகம் கி.மு எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பொருநை நதி நாகரிகத்தின் காலம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. உரத்துச் சொல்வோம்! இந்திய வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும். தமிழ் பண்பாட்டின் வேர்களைத் தேடி கடல் கடந்து தொல்லியல் ஆய்வு நடைபெறும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என வாழ்ந்த குடியின் வரலாறு அறிவியலின் துணையோடு மீட்டெடுக்கப்படும். வரலாறு பற்றிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் என கருத்து பதிவிட்டுள்ளார்.