ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதற்கான மதுரை - காசி உலா ரயில் இன்று (ஜூலை 23) மதியம் 12.20 மணிக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் காணொளி காட்சி மூலமாக டெல்லியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.



விழா காலை 11:30 மணிக்கு தொடங்குகிறது சுதந்திர போராட்டத்தில் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்கள் ரயில்களின் வார விழா  நிறைவு பெறுகிறது. அந்த நிறைவு விழாவில் இந்த சுற்றுலா ரயிலும் துவக்கி வைக்கப்படுகிறது. இது தனியார் ரயில் அல்ல. ஏற்கனவே ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசைக்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பயண சேவையாளர் உதவியுடன் இயக்கிய ரயில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்ய மதுரையில் இருந்து ஜூலை 23 அன்று காசிக்கு ஒரு சுற்றுலா ரயில் "உலா ரயில்" என்ற பெயரில் இயக்கப்பட இருக்கிறது. இந்த 12 நாட்கள் சுற்றுலா ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், விஜயவாடா வழியாக இயக்கப்பட இருக்கிறது. இந்த சுற்றுலாவில் ஏழு சக்தி பீடங்களான ஆந்திர மாநில பீதாம்புரம் புருகுதிகா தேவி, பூரி பிமலாதேவி, ஜஜ்பூர் பிரஜா தேவி,  கல்கத்தா காளி, கயா மங்கள கௌரி, காசி விசாலாட்சி, பிரயாக்ராஜ் அலோப் தேவி ஆகியோரை தரிசித்து பாதகயா, நாபிகயா, ஆடி அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை, பூரி ஜெகநாதர் கோவில் மற்றும் கொனார்க் சூரிய  கோவில், கொல்கத்தா பேலூர் மடம், விக்டோரியா மெமோரியல், விஷ்ணு பாத தரிசனம், காசி கங்கையில் புனித நீராடி ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ அன்னபூரணி தரிசனம் இறுதியாக நாகபஞ்சமி தினத்தன்று விஜயவாடா கிருஷ்ணா நதியில் நீராடி கனகதுர்கா தரிசனத்துடன் சுற்றுலா நிறைவு பெறும்.



இந்த சுற்றுலா ரயிலில் 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சமையல் பெட்டிகள் இரண்டு சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். அளிக்கப்படும் வசதிகளுக்கு ஏற்ப நபர் ஒருவருக்கு மூன்று வகை கட்டணங்கள் முறையே ரூ. 21,500/-, ரூ. 23600/- ரூ. 31400/- வசூலிக்கப்படும். சுற்றுலா பயணிகள் இந்த கட்டண வகைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.