திருமங்கலம் அருகே பெண்கள் மற்றும் மாணவர்களை தரக்குறைவாக பேசிய ஓட்டுனரை கண்டித்து, கிராமத்திற்கு வந்த இரண்டு அரசு பேருந்துகளை 2 மணி நேரத்துக்கு மேலாக சிறை பிடித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


பெண்களிடம் அவதூறு பேச்சு


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம் கிராமத்திற்கு திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தினந்தோறும் ராயபாளையம் பெரியார் பேருந்து நிலையத்திற்கு 4 முறை அரசு பேருந்து வந்து செல்கின்றது. இந்த நிலையில் மாலை நேரம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ராயபாளையம் வரக்கூடிய அரசு பேருந்து திருமங்கலம் பேருந்து நிலையம் வரும்போது, பள்ளி மாணவர்கள் பெண்கள் பேருந்தில் ஏறும்போது ஓட்டுநர் தரக்குறைவாக பேசி வந்துள்ளார்.


அடுக்கடுக்கான குற்றச்சாட்டு


மேலும் திருமங்கலத்தில் இருந்து ராயபாளையம் இடையே உள்ள கரிசல்பட்டி, மேலக்கோட்டை விலக்கு, ராயபாளையம் விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் பேருந்து நிறுத்தத்தில் இருந்தால் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். ஒரு சில நேரம் பேருந்து நிறுத்தத்திற்கு 20 மீட்டர் தள்ளி வந்து நிறுத்துவதாகவும், இதனால் பெண்கள் ஓடி வந்து ஏறக்கூடிய சூழ்நிலையில்  ஓடிவரும்போது, பேருந்து இயக்கி செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் கிராம மக்கள் திருமங்கலத்தில் இருந்து பேருந்து வரும்போது பேருந்தில் பயணித்த மாணவர்களை தரக்குறைவாக பேசி உள்ளார். அதனை எதிர்த்து கேட்ட பெண்களையும் ஓட்டுநர் தரக்குறைவாக பேசி உள்ளார். மேலும் எங்களுக்கு இலவச பேருந்து பயணம்  என்பதால், தான் விரும்பும் இடத்தில் பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்து நிறுத்துவேன். உங்கள் விருப்பத்திற்கு பேருந்து நிறுத்த மாட்டேன்”. என்றும் பேசியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.


- லேட்டரல் என்ட்ரி மூலம் மத்திய அரசுப்பணி; எஸ்சி, எஸ்டி, ஓபிசி வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பதா?- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்


சிறை பிடித்து போராட்டம்


இந்நிலையில் ராயபாளையம் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்து சிறை பிடித்தனர். தொடர்ந்து அவ்வழியாக வந்த சி பி நத்தம் செல்லக்கூடிய அரசு பேருந்தையும் சிறை பிடித்து கிராம பொதுமக்கள் மாணவர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தினர். 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம்  கோட்ட மேலாளர் தயாள கிருஷ்ணன், திருமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் முத்துமணி உட்பட அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அரசு நகர் பேருந்து ஓட்டுநர் பெண்களையும் மாணவர்களையும் தரக்குறைவாக பேசியதை கண்டித்து இரண்டு அரசு பேருந்துகளை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்திய சம்பவம் திருமங்கலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - லேட்டரல் என்ட்ரி மூலம் மத்திய அரசுப்பணி; எஸ்சி, எஸ்டி, ஓபிசி வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பதா?- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”பாஜகவோடு யார் சென்றாலும் அவர்களை எதிர்க்கும் கூட்டணியில் இருப்போம்” சிபிஎம் பாலகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பு..!