மதுரை மாவட்டம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பில் மாரியம்மன் தெப்பக்குளம்  அருகில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய உணவு வணிக  வளாகம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலரான சந்திரமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தெப்பக்குளத்தை சுற்றி மேம்படுத்தக்கூடிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலா மற்றும் இந்துஅறநிலைய முதன்மை செயலாளரும்  மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்திரமோகன் தலைமையில் அனைத்து துறை அதுகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் கலந்துகொண்டனர். 




கூட்டத்தில் பேசிய முதன்மை செயலாளர் சந்திரமோகன் பேசுகையில்...,” மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தெருக்கள் மேடாக உயர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது அதனை மாநகராட்சி சரிசெய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள 75 % நீர்நிலைகள் நிரம்பியுள்ளது இது ஆபத்தானது. சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதன் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. எனவே நிரம்பிய நீர்நிலை பகுதிகளில் அதிகாரிகள் முழுவதும் கண்காணித்துகொண்டே இருக்க வேண்டும். நீர்நிலைகள் நிரம்பிய பகுதிகளை பதற்றமான பகுதியாக கருதி கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும்.




நீர் நிரம்பினால் அதனை வெளியேற்றுவதற்கான வழித்தடங்களை கண்டறிய வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் சில இடங்களில் டெங்கு பரவி வருவதால் மதுரையில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பல்வேறு நாடுகளில் மீண்டும் உருமாறிய புதியவகை கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இங்கும் அதுபோன்ற பாதிப்புகள் வரக்கூடியதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் , படுக்கை வசதிகள் போன்றவற்றை மருத்துவத்துறையினர் தயார் நிலையில் வைக்க வேண்டும். பருவமழை தொடங்கும் போது நெற்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் பாதிக்காத வகையில் பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.