மாநிலம் முழுவதும் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் வெளியிட்டார். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன.





இதில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. இதன்படி, நேற்று (ஜூன் 20ஆம் தேதி) காலை 10 மணிக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 93.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நண்பகல் 12 மணிக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 90.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் உசிலம்பட்டி அருகே +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் சுபாஷ் அருகே உள்ள செக்காணூரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த சூழலில் நேற்று வெளியான தேர்வு முடிவில் சுபாஷ் என்ற மாணவர் இரு பாடப்பிரிவில் தோல்வியடைந்தாக கூறப்படுகிறது. தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவர் சுபாஷ் வீட்டின் அருகிலேயே பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டு பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)