தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக் கூடிய  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மட்டுமில்லாமல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத பல்வேறு முக்கிய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில்  அகச்சுரப்பியல் துறையில் உயரக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஊசி இலவசம் வழங்கப்படுவதாக மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் மற்றும் துறைத் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளனர். 



 

மேலும் அவர்கள் தெரிவிக்கையில், “கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 59 ஆயிரத்து  823 பேர் வெளி நோயாளிகளாகவும், 790 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.  பலவித ஹார்மோன் குறைபாடுகளுக்கு இந்த துறையில் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தைராய்டு, உடல்பருமன், உயரக்குறைபாடுகள், பூப்பெய்துதல் பிரச்னைகள், பீட்யூட்டரி மற்றும் அட்ரீனல் கட்டிகள், ஆண் -  பெண் என்று தீர்மானிக்க இயலாத பிறந்த குழந்தைகளின் பாலினம் உறுதி செய்தல் போன்ற பிரச்னைகளுக்கு ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் ஹார்மோன் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.



 

மேலும், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத  அளவிற்கு அதிக அளவில் தைராய்டு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தைராய்டு பரிசோதனைகள் குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள், பிறந்த குழந்தைகள், மாதவிடாய் மற்றும் கர்ப்பபை பிரச்னை உடைய பெண்கள், குழந்தை பேறின்மை பிரச்னை உள்ளவர்கள் ஆகியோர் இதில் அடங்குவர். தினமும் 60 முதல் 80 எண்ணிக்கையிலான புற நோயாளிகள்  தைராக்ஸின் மற்றும் கார்பிமஸோல் மாத்திரைகளை இலவசமாக பெற்று வருகின்றனர். 



மதுரை அரசு மருத்துவமனையில் 600-க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை உயரக்குறைபாடுகளுக்கான காரணம் கண்டறியப்பட்டு, வளர்ச்சி ஹார்மோன் நோய்க்கான விலை உயர்ந்த மருந்துகள் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக, ஒவ்வொரு மாதமும்  ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள ஊசி மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த 7 வருடங்களில் 120 குழந்தைகளுக்கு மேலாக இந்த சிகிச்சையைப் பெற்றிருக்கிறார்கள். 



தமிழ்நாட்டில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்தும் மேல் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளுக்கு வளர்ச்சி ஹார்மோன், ரத்த பரிசோதனைகள் மூலம் உயரச்சுரப்பி குறைபாடுகள் கண்டறியப்பட்டு வருடத்திற்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த மருந்துகள் ஒவ்வொரு மாதமும் தொடர் சிகிச்சையில் வழங்கப்பட்டு.  வருகிறது. தற்போது இந்த தொடர் சிகிச்சையில் 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். மருத்துவக் கல்வி இயக்குனகரத்தின் செயல்ஆய்வில் தமிழ்நாட்டில் மதுரை அரசு ஆஸ்பத்திரி கடந்த 3 வருடங்களாக முதலிடத்தில் உள்ளது. இந்த மருந்தின் மூலமாக குழந்தைகளின் உயரம் 15 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை வளர்ந்துள்ளனர்.



 

இதுபோல், பூப்பெய்துதல் பிரச்னைகள், தாடி மீசை தோன்றாத 18 வயது நிரம்பிய ஆண்கள்  மற்றும் குழந்தை பேறு இல்லாத தம்பதியினருக்கு சிறப்பு ரத்த ஹார்மோன் பரிசோதனைகள் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எந்திரத்தில் உலகத்தரத்தில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த ஹார்மோன் பரிசோதனை உபகரணம் மதுரை ஆட்சியர் எஸ்.எஸ்.எஸ். என்ற சிறப்பு திட்டத்தின் மூலமாக 'ரூ.25 லட்சம் மதிப்பில் 2020ல் வாங்கப்பட்டது. இதுதவிர, ஆண்- பெண்ணா என்று வகைப்படுத்த முடியாத பிறப்புறுப்பு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாலினம் கண்டறியப்பட்டு உயிர்காக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தாடி மற்றும் மீசை வளராத, ஆண்குறி சிறியதாக உள்ள 18 வயது நிரம்பிய ஆண்களுக்கு, காப்பீட்டு திட்டத்தின் மூலமாக டெஸ்டோஸ்டிரைன் ஹார்மோன் ஊசியும் துறையின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சைகளை, மதுரை அரசு மருத்துவமனையில் அகச்சுரப்பியல் துறையானது, திங்கள் முதல் சனி வரை காலை 9 மணி முதல் 12 மணி வரை அறை எண் 18-ல் செயல்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் சரிவர பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.










ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண