கிரானைட் குவாரி நடத்தி ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு செய்யப்பட்ட  வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் சீரமைப்பு பணிகள் செய்ய முடியவில்லை என அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கைவிடப்பட்ட குவாரிகளை மறுசீரமைக்க வேண்டும்

 

மதுரை மேலூரைச் சார்ந்த வழக்கறிஞர் பா.ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், "மதுரையில் கிரானைட் குவாரிகள் நடத்தி தற்போது செயல்படாமல் உள்ளது. இந்த குவாரி பள்ளங்களில் தெரியாமல் விழுந்து நிகழும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன. யா.ஒத்தக்கடை, இலங்கிப்பட்டி ஆகிய பகுதியில் குவாரிகளில் விழுந்த இருவர் உயிரிழந்த நிலையில், அதனைச் சுற்றி பென்சிங் அமைக்க மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதிகள் மட்டுமின்றி கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, நாவினிப்பட்டி, தனியாமங்கலம், சருகு வலையப்பட்டி, திருவாதவூர், இடையபட்டி, புதுத்தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கைவிடப்பட்ட குவாரிகளில் எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாமல் உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவானது இதுபோல கைவிடப்பட்ட குவாரிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஆனால் அதுபோல நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே மதுரை மாவட்டத்தில் கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, நாவினிப்பட்டி, தனியாமங்கலம், சரகு வலையப்பட்டி, திருவாதவூர், இடையபட்டி, புதுத்தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கைவிடப்பட்ட குவாரிகளை கனிம வள சட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் உயிரிழப்புகளுக்குக் காரணமான சட்டவிரோத குவாரிகளை நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

 

வழக்கு ஒத்திவைப்பு


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மனுதாரர் குறிப்பிடும் பகுதிகளில் குவாரி விதிமுறை மீறி குவாரி நடத்தியதில் ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு அரசுக்கு ஏற்பட்டது, அந்த வழக்கு நடைபெற்று வருவதால் சீரமைப்பு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதிகள் இதுவரை எத்தனை பேருக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது வழக்கு முடியும் வரை இவ்வாறு இருந்தால் இறப்புகள் அதிகரிக்கும் அல்லவா என கேள்வி எழுப்பினர். மேலும், மனு தொடர்பாக கனிமவளத் துறையின் முதன்மைச் செயலர், ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.