மதுரை எம்.பி.சு.வெங்கடேசனுக்கு எதிராக கண்டா வரச்சொல்லுங்க, போஸ்டர் விவகாரத்தில் ரோடு போடுங்க, ரேசன்கடையில் நல்ல பொருள போடுங்கனு சொல்லி ப்ளக்ஸ் வச்சா கோபம் வருதா?  - என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தி.மு.க.,விற்கு எதிராக கோரிக்கை

 

மதுரையில் அமைச்சர் மூர்த்தியின் தொகுதியான  கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டியூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வண்டியூர் கிளை மாநாடு நடைபெற்றது. அதில் வண்டியூர் பகுதிகளில் சாலைகள் மோசமாக இருப்பதால் அதனை சீரமைக்க வேண்டும், ரேசன் கடைகளில் பொருட்கள் தரமற்றதாகவும் ,எடை குறைவாக இருப்பதாகவும் கூறி கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றி அதனை வண்டியூர் பகுதியில் பேனராகவும் வைத்துள்ளனர். திமுகவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேனர் திமுகவின் ஆட்சிக்கு எதிராக உள்ளதாக கூறி அமைச்சர் மூர்த்தியிடம் அப்பகுதி திமுகவினர் போனில் சொல்லியதோடு போட்டோவும் எடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

 

கண்டா வரச்சொல்லுங்க போஸ்டர்

 

இதனையடுத்து ஓரிரு நாட்களிலயே  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வண்டியூர் பகுதி முழுவதும் கண்டா வரச் சொல்லுங்க...! என்ற வாசகத்துடன் மதுரை எம்.பி.சு.வெங்கடேசனுக்கு எதிராக பொதுமக்கள் என்ற பெயரில் நோட்டீஸ்கள் ஒட்டபட்டுள்ளது. அந்த சுவரொட்டியில் மதுரை பாராளுமன்ற தொகுதியில், இரண்டு முறை எம்.பி யாக வெற்றி பெற்றும், வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்களே! உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு, இதுவரை நீங்கள் செய்தது என்ன? என்ற வாசகத்தோடு
  வண்டியூர் கிராம பொதுமக்கள் என்ற பெயரில் அச்சிடப்பட்டு அமைச்சரின் தொகுதியில் மட்டுமே  போஸ்டர் ஒட்டிய சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையை கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சு.வெங்கடேசனுக்கு எதிராக ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்த சமூகவலைதளங்களிலும், ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இது மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியினரிடையே மேலும் கோபத்தை உருவாக்கியது. 

 

கடுமையாக சாடிய சு.வெங்கடெசன்

 

இந்நிலையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய மாநாட்டில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் திமுகவினரை கடுமையாக சாடி சவால் விடுத்து பேசியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 


சிறந்த போராட்டக்காரர்கள் இருந்தால் எங்களோடு வாருங்கள் போட்டி போடலாம் 

 


ஊமச்சிக்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சு.வெங்கடேசன்...,” வண்டியூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்று கிளை மாநாட்டு கோரிக்கைகளை பேனராக வைத்துள்ளனர். அதில் வண்டியூர் சாலை  மோசமாக உள்ளது. எனவே சாலையை உடனடியாக செப்பனிட  வேண்டும், ரேஷன் கடைகளில் தரம் இல்லாத பொருட்களும்,  எடை குறைவாகவும் வழங்குவதால் இதில் அரசு உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. ரேஷன் கடையில் தரமான பொருள்வை என்றால் ஒருத்தனுக்கு கோபம் வருகிறது, என்றால் யாராய் இருக்கும் தரம் இல்லாத பொருளை எவன் போட்டுக் கொண்டிருக்கிறானோ அவன் தான். தரம் இல்லாத பொருளை எடை குறைவான பொருளை போடக்கூடியதற்கு காரணமான நபராக தான் இருக்கும். அதனால்  எம்.பியை கண்டா வர சொல்லுங்க என போஸ்டர் ஒட்டியுள்ளனர். நாங்க இங்கதான் இருக்கிறோம். வண்டியூரில் தான் இருக்கோம். உன் ரேஷன் தட்டோடு ரேஷன் கடைக்கு வந்து சேரு,  மக்களுக்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள். எங்களை விட சிறந்த போராட்டக்காரர்கள் இருந்தால் எங்களோடு வாருங்கள் போட்டி போடலாம் .

 

போஸ்டர் யுத்தம்

 

பின்னாலிருந்து ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டி எங்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து நீங்கள் அசிங்கப்பட்டு கொள்ளாதீர்கள்” என்று  திமுகவை கடுமையாக சாடி பேசியுள்ளது, மதுரையில் அமைச்சர் தொகுதியில் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே போஸ்டர் யுத்தமாக மாறியுள்ளது. மேலும் போஸ்டரின் பின்னணியில் அமைச்சர் மூர்த்தி உள்ளாரா? எம்.எல்.ஏ கோ.தளபதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. நோட்டீஸ் விவகாரம் மதுரை அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.