தன்பாலின உறவில் இருந்ததால், குடும்பத்தால் கடத்தப்பட்ட பெண்ணை அவரது விருப்பப்படி செல்ல அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


விருதுநகரைச் சேர்ந்த  பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,  எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தோம். கடந்த 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு,  அப்பெண்ணை கடத்திச் சென்றுவிட்டனர். அவரை மீட்டுத் தரக்கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அப்பெண்ணின் சகோதரர் தன்பாலின உறவை விட்டுவிடுமாறு வலியுறுத்தி, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். என்னையும் மிரட்டினார். இதுதொடர்பாக வத்தலகுண்டு துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும், தற்போது வரை வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. அப்பெண்ணின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. ஆகவே பெண்ணை மீட்டு நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, மனுதாரரின் தோழி 21 வயது நிரம்பியவர்.  ஆகவே அவரது விருப்பப்படி  செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.


 




மற்றொரு வழக்கு


 


மத்திய அரசின் வழிகாட்டலின் படி பள்ளி செல்லாமல் மற்றும் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்த கோரிய வழக்கில், தமிழகம், கேரளா கல்வியறிவில் சிறந்து விளங்குகிறது. இது அந்தந்த மாநில அரசுகளின் சாதனை என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.


மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.  அதில், "பல மாணவர்கள் குடும்ப கொரோனா சூழலில் வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் சூழல் உருவாகியது. இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஆசிரியர்கள் வட்டார வள ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளி மேலாண்மை குழு ஆகியவற்றின் மூலம் பள்ளி செல்லும் வயதுடைய இடைநின்ற குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதையும் நடப்பு கல்வி ஆண்டில் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், இது தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் கணக்கெடுப்புகளுக்கு இடையே மிகப் பெரும் வேறுபாடுகள் உள்ளன.


ஆகவே மத்திய அரசின் வழிகாட்டலின் படி பள்ளி செல்லாமல் மற்றும் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் நடத்தி, பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி ஆனந்தி தலைமையிலான அமர்வு, "குழந்தை தொழிலாளர்களை மீட்கும் வேளை குடும்பமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குழந்தைகள் இடைநிற்றல் என்பது மிகப்பெரும் பிரச்சனை.  தமிழகம், கேரளா. கல்வியறிவில் சிறந்து விளங்குகிறது. இது அந்தந்த மாநில அரசுகளின் சாதனை. தமிழக அரசு  இடைநிற்றலை கவனத்தில் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து, தற்போதைய நிலவரப்படி பள்ளி இடைநின்ற குழந்தைகளின் புள்ளி விபரங்கள் தொடர்பாகவும் அதனைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் மனுதாரர் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண