ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை - காசி இடையே உலா ரயில் என்ற பெயரில் ஆன்மீக சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து கடந்த 23-ம் தேதி மதியம் புறப்பட்டது. இந்த ரயிலை டெல்லியில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


 





 



இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், விஜயவாடா வழியாக காசி சென்று அடையும். ஏழு சக்தி பீடங்கள் பாத கயா, நாபி கயா மற்றும் ஆடி அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை, பூரி ஜெகன்நாதர் கோயில், கொனார்க் சூரியக் கோயில், கொல்கத்தா உள்ளூர் சுற்றுலா, காசி விசுவநாதர், அன்னபூரணி தரிசனம், பின்பு விஜயவாடா கனகதுர்கா தரிசனத்தோடு சுற்றுலா நிறைவடைகிறது. சுற்றுலா செல்லும் மொத்த தூரம் 5548 கிலோமீட்டர் ஆகும். அதே போல் ஆடி அமாவாசைக்கு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்  ஏற்பாடு செய்யப்பட்டது





 

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நேற்று (வியாழக்கிழமை) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதன்படி மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட ரயில், காலை 9.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றது. இது கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி வழியாக சென்றது. மதுரை-ராமேஸ்வரம் ஆடி அமாவாசை சிறப்பு ரயிலில் 1140 பேர் பயணம் செய்தனர். இதன் வாயிலாக 72 ஆயிரத்து 700 ரூபாய் கட்டணம் வசூல் ஆனது. மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்ட ரயில், மாலை 5.15 மணிக்கு மதுரை வந்தடைந்தது. ராமேஸ்வரம் - மதுரை ஆடி அமாவாசை சிறப்பு ரயிலில் 1853 பேர் பயணம் செய்தனர். இதன் வாயிலாக  1 லட்சத்து 28 ஆயிரத்து 575 ரூபாய் கட்டணம் வசூல் ஆனது. இந்த சிறப்பு ரயிலில் 2993 டிக்கெட் விற்பனையான நிலையில் ரூ. 2 லட்சத்து ஆயிரத்து 275 கட்டணம் வசூலாகியுள்ளது குறிப்பிடதக்கது.