மதுரை மாவட்டம், பி.பி.குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள புதுமண்டபத்திலுள்ள கடைகள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளது.  2006ஆம் ஆண்டு 20 கடைகளுடன் செயல்பட்டு வந்த குன்னத்தூர் சத்திர கட்டிடம் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக 200 கடைகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது புதுமண்டபத்தில் செயல்பட்டு வரும் 300 கடைகள், ஏற்கனவே குன்னத்தூர் சத்திரத்தில் செயல்பட்ட 20 கடைகள் என சேர்த்து, புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால், தற்போது கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரம் கட்டிடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் பின்பற்றப்பட்டு கட்டப்படவில்லை. புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்தில் 200 கடைகள் மட்டும் கட்டப்பட்டுள்ள நிலையில், அதில் 300 கடைகள் அமைந்தால் விசேஷ நேரங்களில் அதிகமான மக்கள் கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் கட்டிடத்திற்கு செல்ல ஒரு வழிபாதை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவசர வழிகள் அமைக்கப்படவில்லை. மேலும் முறையான வாகனம் நிறுத்துமிட  வசதிகள் செய்யப்படவில்லை. 300 கடைகள் செயல்பட உள்ள கட்டிடத்தில் 100 இருசக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்துவதற்கான இடம் உள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பதற்கான முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

 

எனவே,புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், அதுவரை குன்னத்தூர் சத்திர கட்டிடத்தை திறக்க தடை விதித்தும்  உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "பத்திரிக்கைகளில் குன்னத்தூர் சத்திரத்திலுள்ள கடைகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது திறப்பதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது"என தெரிவிக்கப்பட்டது.

 

மதுரை மாநகராட்சி தரப்பில்,"கடைகள் ஒதுக்கீடு மட்டுமே நடைபெறுகிறது. கடைகள் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை. இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்" என கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள், கடைகளை ஒதுக்கீடு செய்வது ஒப்படைப்பது  இங்கு முக்கியம் இல்லை. முதலில் கட்டிடம் பாதுகாப்பானதா? என்பது உறுதி செய்ய வேண்டும் என கூறி மதுரை மாநகராட்சி பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.