மதுரை மாவட்டம், கோவிலாங்குளம் சந்திரன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் அதில், "மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியிலுள்ள கண்மாய்களுக்கு பெரியாறு வைகை ஆறு திருமங்கலம் பாசன கால்வாய் மூலம் நீர் நிரப்பட்டு வந்தது.  இதன் மூலம் உசிலம்பட்டியிலுள்ள 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும், 25 ஆயிரம் விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால், பெரியாறு வைகை ஆறு நீர் திருமங்கலம் பாசன கால்வாய் வழியாக,    உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வருவதை ஜோதிமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த தனி நபர் தடைகளை ஏற்படுத்தி நீர் வருவதை தடுத்து வருகிறார்.
  

 

எனவே, பெரியாறு வைகை ஆறு நீர் திருமங்கலம் பாசன கால்வாய் வழியாக ஜோதிமாணிக்கம் கிராமத்தில் வரும் போது தனி நபர் ஏற்படுத்திய தடையை அகற்றி உசிலம்பட்டியிலுள்ள கொடிமங்கலம் கண்மாய், ஜோதிமாணிக்கம் கண்மாய், கோவிலாங்குளம் பெரியகண்மாய், ஆண்டிகுளம் கண்மாய், வளையன்குளம் கண்மாய், நவநீதன்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு தடையின்றி தண்ணீர் வருவதை உறுதி செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா,  வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 12 ம் தேதி ஒத்தி வைத்தனர்.

 




 

கோவில்பட்டி பொது வார்டாக மாற்ற கோரிய வழக்கு - அரசு அதிகாரிகளிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவு

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த முத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள சங்கரலிங்கபுரம் வார்டு 5-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வாக்காளர்கள் 1,300 பேர் உள்ளனர். ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த வாக்காளர்கள் 700 பேர் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக சங்கரலிங்கபுரம் வார்டு-5 தனித் தொகுதியாக இருந்து வருகிறது. சங்கரலிங்கபுரம் வார்டு-5ல், 18 தெருக்கள் உள்ளது.

 

2019ஆம் ஆண்டு நகராட்சி மற்றும் நீர் வழங்கல் துறையின் சார்பாக வெளியிட்ட அரசாணையில் வார்டு-5 பொது வார்டாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அரசியல் அழுத்தத்தின் காரணமாக வார்டு வரையறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சங்கரலிங்கபுரம் வார்டு 5ல் உள்ள தெருக்களை மற்ற வார்டுகளுடன் இணைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சங்கரலிங்கபுரம் வார்டு 5யை பொது வார்டு மாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சங்கரலிங்கபுரம் வார்டு-5ல் உள்ள 18 தெருகளில் 3 தெருக்கள் வார்டு 3ல் இணைக்கப்பட்டு பொது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 15 தெருக்கள் வார்டு-4ல் இணைக்கப்பட்டு தனி வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து நீதிபதிகள், சங்கரலிங்கபுரம் வார்டு 5 எவ்வாறு வார்டுகள் 3 மற்றும் 4-ல் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து நகராட்சி நிர்வாகம் & நீர் வழங்கல் துறை தலைமை செயலர், தமிழ்நாடு வார்டு வரையறை ஆணையர் மற்றும் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் அரசு வழக்கறிஞர் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.