23.8 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்


2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். வரும் 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் இன்று (மே 2) வெளியாகி உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் பிரிவில் 24 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக 23,81,833 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முன்வந்துள்ளனர். இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், க்ரீமி லேயர் அல்லாத ஓபிசி (OBC NCL) பிரிவினரைச் சார்ந்தவர்கள் ஆவர். 6 லட்சம் பேர் பொதுப் பிரிவு மாணவர்கள். அதேபோல, 3.5 லட்சம் மாணவர்கள் எஸ்சி பிரிவு மாணவர்கள் ஆவர். 1.8 லட்சம் மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவிலும் (Gen- EWS category) 1.5 லட்சம் மாணவர்கள் எஸ்டி பிரிவிலும் வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் சிறுநீர்ப்பை பாதிப்பால் கட்டுப்பாடின்றி தொடர்ந்து சிறுநீர் வெளியேறுவதால் மாணவி டயபர் அணிந்து ‘நீட்' தேர்வில் பங்கேற்க மனு கோரிய நிலையில் அதற்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


 மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்




நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 19 வயது மாணவி ஒருவர்,  மே 5-ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் நீட் தேர்வின் போது டயபர் அணிந்து பங்கேற்கவும், தேவைப்படும் போது டயபர் மாற்றிக் கொள்ள அனுமதிக்கவும்  உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

 


இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவு

 

மனுதாரர் 4 வயதில் தீ விபத்தில் சிக்கியுள்ளார். அதிலிருந்து அவர் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் தொடர்ந்து டயபர் அணிந்திருக்க வேண்டும், அடிக்கடி டயபர் மாற்றிக்கொள்ள வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் தனது உடல் நிலையை குறிப்பிட்டு தேர்வு முகாமில் டயபர் அணிந்திருக்கவும், தேவைப்படும் போது டயபர் மாற்றிக்கொள்ளவும் அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீட் தேர்வு நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நீட் தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் வரம்பற்ற சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.  நீட் தேர்வு எழுதுவோரின் ஆடை கட்டுப்பாட்டில் மனுதாரர் சந்திக்கும் பிரச்சினை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மனுதாரர் எப்போதும் டயபர் அணிந்திருக்க வேண்டும். அதை அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டும். இதனால் அவர் கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த சலுகை மறுக்கப்பட்டால் அவரால் நீட் தேர்வு எழுத முடியாமல் போகும். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான பாகுபாட்டுக்கு வழிவகுக்கும்.

 

வழக்கு முடித்து வைப்பு

 

நீட் தேர்வர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் அணிந்திருக்க அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அது இல்லாததால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதை மனதில் வைத்து நீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, மனுதாரின் கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக தேர்வு மைய அதிகாரிக்கு  உரிய உத்தரவு பிறப்பிப்பதாக தேசிய தேர்வு மையம் உறுதியளித்துள்ளது. இதை பதிவு செய்து கொண்டு வழக்கு முடிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.