2024ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதை https://neet.ntaonline.in/frontend/web/admitcard/indexindex என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.


இன்னும் 2 நாட்களில், அதாவது மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் இன்று (மே 2) வெளியாகி உள்ளது.


23.8 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்


2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் பிரிவில் 24 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக 23,81,833 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முன்வந்துள்ளனர். 


இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், க்ரீமி லேயர் அல்லாத ஓபிசி (OBC NCL) பிரிவினரைச் சார்ந்தவர்கள் ஆவர். 6 லட்சம் பேர் பொதுப் பிரிவு மாணவர்கள். அதேபோல, 3.5 லட்சம் மாணவர்கள் எஸ்சி பிரிவு மாணவர்கள் ஆவர். 1.8 லட்சம் மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவிலும் (Gen- EWS category) 1.5 லட்சம் மாணவர்கள் எஸ்டி பிரிவிலும் வருகின்றனர்.




ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?


* தேர்வர்கள் https://neet.ntaonline.in/frontend/web/admitcard/indexindex என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.  


* அதில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை சரியாக உள்ளிடவும். 


* நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். 


* அதைப் பதிவிறக்கம் செய்து, வருங்காலப் பயன்பாட்டுக்காக வைத்துக் கொள்ளவும். 


தேர்வு மையத்தில் அனுமதிச் சீட்டைக் காட்டிய பிறகே தேர்வர்கள், தேர்வு அறைக்குள் செல்ல முடியும். செல்லக்கூடிய அனுமதிச் சீட்டு இல்லாத தேர்வர்கள், தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல தேர்வு நடைபெறும்போதே, மைய கண்காணிப்பாளர்கள் உங்களின் ஹால் டிக்கெட்டைப் பரிசோதிக்கலாம் என்பதால், ஹால் டிக்கெட்டை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 


1.30 மணிக்குப் பிறகு அனுமதி இல்லை


தேர்வர்கள், சரியான நேரத்துக்குத் தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாக, அதாவது மதியம் 12 மணிக்கு தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு, செயல்படும். பகல் 1.30 மணிக்குப் பிறகு தேர்வு மையத்துக்குள் வர, தேர்வர்களுக்கு அனுமதி இல்லை. 


ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://exams.nta.ac.in/NEET/images/neet-ug-2024-draft-ib-09022024.pdf என்ற தகவல் வழிகாட்டியைக் காணுங்கள்.


தொடர்புகொள்ள- தொலைபேசி எண்: +91-11-40759000


மின்னஞ்சல் முகவரி: neet@nta.ac.in 


கூடுதல் விவரங்களுக்கு: https://neet.nta.nic.in/


இதையும் வாசிக்கலாம்: NEET UG 2024: 3 நாட்களில் நீட் தேர்வு; தேர்வு நாளில் என்னென்ன செய்ய வேண்டும்? கூடாது?