பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது பெற்ற மாணவருக்கு மருத்துவ சீட் ஒதுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 






கல்வி, தொழில்நுட்பம், கலை, விளையாட்டில் சாதனை படைத்த மாணவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு அடிப்படையில் தனக்கு மருத்துவப் படிப்பில் இடம் வழங்கக் கோரி மதுரையைச் சேர்ந்த சிவசூர்யா என்பவர் உயர் நீதிமன்றகிளையில் மனு தாக்கல் செய்தார்.

 

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலை, விளையாட்டில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 2 இடங்களை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இந்த இடஒதுக்கீடு மத்திய அரசின் கொள்கை முடிவு. சாதனை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டக்கூடாது. மனுதாரர் இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் இடஒதுக்கீட்டு இடத்துக்கு விண்ணப்பித்து உள்ளார். அந்த இடங்களுக்கு பயன் பெறுபவர்களை கண்டறிய முடிவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது .மேலும் மனுதாரர் 2016-ல் பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது பெற்றுள்ளார். இதனால் மனுதாரர் அந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர். இதனால் மனுதாரருக்கு அடுத்தக் கல்வியாண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.



 மற்றொரு வழக்கு


நெல்லையில் மின் விபத்தால் நிரந்தர பாதிப்புக்கு உள்ளானவருக்கு 10 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

நெல்லை வடக்கன்குளத்தைச் சேர்ந்த சவரி ஆண்டோ  நிஷாந்த் மின் விபத்தால் நிரந்தர பாதிப்புக்கு உள்ளானதால் 25 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க கோரி மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கடந்த 2018 நவம்பர் மாதம் டிரான்ஸ்பார்மர் வெடித்து ஏற்பட்ட மின்விபத்தில் முகம் தவிர உடல் பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் சார்பில் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட மின் கருவிகளை முறையாக பராமரிக்காததே விபத்து ஏற்பட்ட காரணம் என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தரப்பில் 50% குறைபாடு ஏற்பட்டுள்ளதாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருடைய கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் திருமண வாழ்க்கையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு 10 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்படுகிறது. 

 

மனுதாரரின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், 10 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும்.  உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற எட்டு வாரங்களுக்கு உள்ளாக இந்தத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.

மனுதாரர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டியை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், 10 ஆண்டுகள் அந்தத் தொகையை எடுக்க இயலாது. மனுதாரர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மின்வாரியத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும்.  அவருக்கான மருந்து செலவுகளுக்கும் மின்வாரியமே பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.