கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை, மேல்புரம், குருந்தன்கோடு ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள வேளாண்மை  உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு தொடரப்பட்டது. முஞ்சிறை, மேல்புரம் மற்றும் குருந்தன்கோடு பகுதிகளில் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களைக் கவனிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 3 மாதத்திற்குள் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப வேளாண் துறை இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

பொது நல வழக்கு:

கன்னியாகுமரியை சேர்ந்த வின்ஸ்,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முஞ்சிறை, மேல்புரம் மற்றும் குருந்தன்கோடு ஆகிய பகுதிகளில் காலியாக உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் கிடைப்பதில் தாமதம் மற்றும் விவசாய வேளாண்மை  சம்பந்தமாக யாரை அணுகுவது என்று தெரியாத நிலை உள்ளது. எனவே, விவசாயம் நிறைந்த இந்த பகுதியில் வேளாண்மை  உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், முஞ்சிறை, மேல்புரம் மற்றும் குருந்தன்கோடு ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் நலன் சார்ந்த 

அரசு கொண்டு வரும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்குத் தெரியப்படுத்துவதில்லை. எனவே காலியாக உள்ள வேளாண்மை  உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரபட்டது.

 

மூன்று மாதத்திற்குள் நிரப்ப உத்தரவு!



இதைத்தொடர்ந்து அரசு தரப்பில், முஞ்சிறை, மேல்புரம் மற்றும் குருந்தன்கோடு பகுதிகளில் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களைக் கவனிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்டு நீதிபதிகள், மூன்று மாதத்திற்குள் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேளாண் துறை இயக்குனருக்கு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.