மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுநீர் வைகை ஆற்றில் கலப்பதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி வழக்கில் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


வைகை ஆறு


மதுரையைச் சேர்ந்த வைகை நதிகள் மக்கள் இயக்க நிறுவனர் வைகை ராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் வைகை ஆறு உற்பத்தியாகி மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வரை செல்கின்றது. மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்கு வைகை ஆறு பெரிதும் பயன்படுகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு வைகை நீர் குடிநீர் ஆதாரமாக உள்ளது.


வைகை ஆற்றில் மருத்துவக் கழிவு


இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு புறநோயாளிகள் 6 ஆயிரம் பேரும், உள் நோயாளிகளாக 3500 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சை செய்ய உயர்தர மருத்துவம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மருத்துவமனையில் இருந்து வெளியேறக்கூடிய ரசாயனம் கலந்த மருத்துவ கழிவுநீரை எந்தவிதமான சுத்திகரிப்பு செய்யாமல் மதுரை மாநகராட்சி, மதுரை மாநகர் ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் நேரடியாக குழாய் மூலம் கலக்க வைக்கின்றது. இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடிய தொற்று நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவ கழிவை மதுரை மாநகராட்சி நேரடியாக குழாய் மூலம் வைகை ஆற்றில் கலப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியுள்ளார்.


ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு


இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து பொதுப்பணித்துறை செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - முதல்வரை சந்திக்க கஞ்சா பொட்டலத்துடன் வந்தவர் கைது? - மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன?


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Thoothukudi: 3 மாதமா குடிநீர் குழாய் இருக்கு... தண்ணீர் வர நல்லியும் இருக்கு - ஆனா வெறும் காத்து தாங்க வருது