திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018 ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இதற்கிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் அமலாக்கத்துறை அதிகாரியாக அங்கிட் திவாரி பணியில் சேர்ந்தார். 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இச்சூழலில், டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் இதிலிருந்து அவரை காப்பாற்றுவதாகவும் கூறி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் அங்கிட் திவாரி. இதற்கு டாக்டர் சம்மதிக்காததால் கடைசியில் 51 லட்சம் என பேரம் பேசி முடிக்கப்பட்டது. அதில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் காரில் வைத்து கொடுத்தார். மீதித் தொகையை டாக்டரிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டுள்ளார். இப்படிப்பட்ட சூழலில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச் சாலையில் அதிகாரியின் காரில் 20 லட்சம் ரூபாயை வைத்தனர். அந்த காரை எடுத்து அவர் செல்ல முயன்ற போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால், அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார்.
பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கொடைரோட்டில் உள்ள டோல்கேட்டிற்கு தகவல் தெரிவித்து அந்த காரை மடக்கி பிடித்து அவரை திண்டுக்கல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கைது செய்துள்ளதுடன். அவரிடம் இருந்து 20 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி பின் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அங்கித்திவாரியை மூன்று நாள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்து மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்று தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உள்ளார்.