2012 அரசாணையின்படி தமிழ்நாட்டிலுள்ள பள்ளி அனைத்திலும் மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைத்து முறையாக பள்ளி மாணவ, மாணவியருக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

மதுரையைச் சேர்ந்த வெர்ணிகா மேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போஸ்கோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகிறது. இதில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளது.

 

இதனால் பள்ளிப் பயலும் பெண் குழந்தைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனை தடுக்க தமிழ்நாடு அரசு 2012 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியான அழுத்தத்தை போக்க மொபைல் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என அந்த அரசாணையில் குறிப்பிட்டிருந்தது.

 

இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகளில் மனநலம் குறித்த ஆலோசனையை மாணவ, மாணவிகளுக்கு வழங்கு மொபைல் ஆலோசனை மையம் இயங்குகிறதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு முறையாக பதில் அளிக்கப்படவில்லை.

 

2012ல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி பள்ளி மாணவ, மாணவியருக்கு முறையாக மொபைல் மனநல ஆலோசனை மையம் மூலம் ஆலோசனை வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மொபைல் மன ஆலோசனை மையம் அமைத்து மாணவ மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது நீதிபதிகள், 

 

* 2012ல் அரசாணை வெளியிட்டு இதுவரை மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன்? 

 

* பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக செயல்படுத்த வேண்டும். 

 

* மொபைல் மனநல ஆலோசனை மையம் மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்று.

 

எனவே, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைத்து முறையாக பள்ளி மாணவ, மாணவியருக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.