பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கரூர், குளித்தலை அரசு உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் மருதைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் மருதை, பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் இந்த வழக்கு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஒன்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே ஜாமின் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதி மனுதாரர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனுதாரர் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் 30 ஆண்டுகளாக அதே பள்ளியில் பணியாற்று வருகிறார். தற்பொழுது பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்குவதனால் சாட்சியங்களை கலைப்பதற்கு மாணவர்களிடம் பேசுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் இல்லை. மேலும் அவரது 59 வயதினை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படுகிறது. ஆசிரியர் சேலம் மாவட்டத்தில் தங்கி சேலம் மாநகர சிட்டி காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்து இடவேண்டும். மனுதாரர் பள்ளி மாணவர்களை சந்தித்து பேசக்கூடாது, சாட்சியங்களை கலைக்கும் நோக்கத்தில் செயல்படக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் வாசலில் இருந்த பழைய மின் கம்பியை அகற்றுவதற்காக ரூ.10000 லஞ்சம் பெற்றதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பசுவநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதி மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொது கல்வி & அறக்கட்டளைக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் வாரந்தோறும் புதன்கிழமை காலை 10:30 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். மனுதாரர் சாட்சியங்களை கலைக்கும் நோக்கில் செயல்படக்கூடாது. மனுதாரர் தப்பித்து செல்ல முயற்சிக்கக் கூடாது. இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகளை விதித்து மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.