காதலிக்கும் பொழுது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வேன் என மிரட்டியதாக காதலி அளித்த புகாரின் பேரில் செய்யது முகமது என்பவர் நாகர்கோயில் சைபர் கிரைம் காவல் துறையினரால் மார்ச் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது முகமது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், இதுவரை எந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை மனுதாரர் மீது வேறு எந்த ஒரு குற்றச் செயலும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில், மனுதாரர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடவில்லை. ஆனால், இணையத்தில் தனிப்பட்ட இடத்தில் கடவுச்சொல் மூலம் புகைப்படங்களை மறைத்து வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் காதலிக்கும் பொழுது எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களை கடவுச்சொல் வைத்து மறைத்து வைத்துள்ளார். மனுதாரர் இணையத்தில் மறைத்து வைத்துள்ள புகைப்படங்களுக்கான கடவுச்சொல்லை (password) விசாரணை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அதில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் விசாரணை அதிகாரி அழிக்க (Delete) வேண்டும். மனுதாரர் சாட்சியங்களை அளிக்கக் கூடாது கீழமை நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை மனுதாரர் தலைமறைவாக கூடாது போன்ற விதிமுறைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் மனுதாரர் விதி மீறலில் ஈடுபட்டால் கீழமை நீதிமன்றம் மனுதாரருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டியன் மீதான குண்டாஸை ரத்து
பாளையங்கோட்டையை சேர்ந்த நிஷா, தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு, "இந்த வழக்கில் மனுதாரரின் தந்தை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021 ஜூலை 31ஆம் தேதி, மனு அளிக்கப்பட்ட நிலையில் 41 நாட்கள், அரசு விடுமுறை போக 22 நாட்கள் தாமதமாக மனுவை நிராகரித்துள்ளனர். அந்த கால தாமதத்திற்கு முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதுபோன்ற கால தாமதங்கள் சட்டவிரோதமானவை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கை பொறுத்த வரை 41 நாட்கள் காரணமின்றி காலதாமதம் என்பதால் இந்த உத்தரவை ரத்து செய்யலாம். ஆகவே மனுதாரரின் தந்தை ராஜபாண்டியன் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் இறுதி அறிக்கை 90 நாட்களுக்கு பின்பாகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எளிதாக ஜாமின் பெற்றுவிடுகின்றனர். ஆகவே குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இந்த உத்தரவு குண்டாஸ் தொடர்பான வழக்குகளுக்கும் பொருந்தும். கீழமை நீதிமன்றங்களில், குறிப்பாக குற்றவியல் நீதிமன்றங்கள் ஆய்வகம் தொடர்பான ஆய்வு அறிக்கைகள் இல்லை என்பதற்காக இறுதி அறிக்கைகளை திருப்பி அனுப்பக்கூடாது. இந்த உத்தரவை கீழமை நீதிமன்றங்கள் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக காவல்துறை தலைவர் இது தொடர்பான சுற்றறிக்கையை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பதிவுத்துறை இந்த உத்தரவை தலைமை நீதிபதி முன்பாக சமர்ப்பித்து, இதுதொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் சுற்றறிக்கை அனுப்புவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.