இலங்கை அகதிகள் முகாம் அமைத்து வீடுகள் கட்டுவதற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த ஈ.டெண்டர் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுசிலா உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழக அரசு சார்பில் தமிழக முழுவதிலும் இலங்கை அகதிகளுக்கு 834 வீடுகள் கட்டுவதற்கு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது. அதன், அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் புதூர் பஞ்சாயத்து உட்பட்ட தப்பாதி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் அமைத்து 24 வீடுகள் கட்டுவதற்கான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஈ.டெண்டர் முறையில் ஒப்பந்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள ஈ.டெண்டரில் நிபந்தனைகள் அனைத்தும் உள்ளூரில் பஞ்சாயத்து உட்பட்ட ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கின்றது.
இதனால், பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பின்மை உருவாகிறது. பஞ்சாயத்துக்குட்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் இலங்கை அகதிகளுக்கு முகாம் அமைத்து வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் வழங்கப்படும் பொழுது கிராமத்தில் உள்ள நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். எனவே, இலங்கை அகதிகளுக்கு முகாம் அமைத்து வீடுகள் கட்டுவதற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த பேக்கேஜ் ஈ.டெண்டர் உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், இலங்கை அகதிகள் முகாம் அமைத்து வீடுகள் கட்டித் தருவதற்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இதற்கான ஒப்பந்தங்கள் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் இதற்காண பணம் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது பஞ்சாயத்திற்கு உட்பட்டது இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, பஞ்சாயத்து நிதியிலிருந்து இலங்கை அகதிகள் முகாமிற்கு பணம் செலவிடப்படவில்லை இதற்காக அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்